டெல்லி, ஜூலை 18 – மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் வான்வழிப் பாதையில்தான், பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வர இருந்தது.
ஆனால் மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து மாற்றுப் பாதையில் மோடியின் விமானம் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் ஜெர்மனியில் நேற்று இந்திய தூதரக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக கிழக்கு உக்ரைன் வான்வழியாக நாடு திரும்புவதாக இருந்தது. இந்த நிலையில்தான் கிழக்கு உக்ரைனில் 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே ஜெர்மனியில் இருந்து மோடி பயணித்த விமானம் புறப்பட்டுவிட்டது. ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து கிழக்கு உக்ரைனை வந்தடைய 3 மணி நேரமாகும்.
இதனால் கிழக்கு உக்ரைன் வான்வழியாக வராமல் நடுவழியிலேயே மாற்றுப் பாதையில் மோடி பயணித்த விமானம் இயக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தது. இதேபோல் பிற நாட்டு விமானங்களும் கிழக்கு உக்ரைன்வான் வழியை பயன்படுத்தாமல் மாற்றுப் பாதையிலேயே இயக்கப்பட்டன.