டோநெட்ஸ்க், ஜூலை 22 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-ன் இரு கறுப்பு பெட்டிகளை மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க பல சர்ச்சைகள் எழுந்து வந்த வேளையில், இன்று அதிகாலை 6.11 மணிக்கு அவ்விரு பெட்டிகளும் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டோநெட்ஸ்க் மக்கள் குடியரசு தலைவர் அலெக்ஸ்சண்டேர் போரோடை, எம்எச்17 பேரிடர் விவகாரத்தை தீர்க்க மலேசியாவும், நெதர்லாந்தும் தங்கள் குழுவினரை அனுப்பியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு தரப்பினரும் ஒரு சில முக்கியமான ஆவணங்களில் கையெப்பம் இட்ட பின் அப்பெட்டிகள் பத்திரமாக மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு படையை சார்ந்த முகமது சுக்ரி, மலேசியாவின் கோரிக்கையை ஏற்று அப்பெட்டிகளை ஒப்படைத்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், விமானம் விழுந்த இடத்திற்கு செல்ல மலேசிய அதிகாரிகளுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.
இதனிடையே, நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக், எம்எச்17 விமானத்தின் கறுப்பு பெட்டியை மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்தும், அவர்களை விமானம் விழுந்த இடத்திற்கு செல்ல அனுமதியளிப்பது குறித்தும், உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் ஓர் ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.