புதுடெல்லி, ஜூலை 25 – இந்தியாவிற்கு உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது.
ஆசியப் பொருளாதாரத்தை எதிரொலிக்கும் பிம்பமாக இந்தியா மற்றும் சீனா இருந்து வருகின்றது. ஆசிய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் பட்சத்தில் அது உலக பொருளாதார அமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு உலக வங்கி இந்தியா உட்பட முக்கிய ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை கண்காணித்து வருவது வாடிக்கை. சமீபத்திய ஆராய்ச்சியின் படி, கடந்த சில வருடங்களாக இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது.
மேலும், இந்தியாவின் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையான அரசு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தற்போது இந்தியாவிற்கு அளிக்கப்படும் நிதி அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் என உலக வங்கி கருதுகின்றது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக வங்கியிடம் இருந்து நிதி உதவிகள் மட்டுமல்லாது புதிய நிதி நிபுணத்துவத்தையும் இந்தியா எதிர்பார்க்கின்றது. தற்போது அதி வேகமான உலகத்தில் நாம் இருப்பதால் அதே வேகத்தில் நாம் நாடும் செயல்படவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், உலக வங்கி குறிப்பிட்டுள்ள திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமே நல்ல பலனை நமது நாடு பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவிற்கு உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 15 முதல் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.