பியங்யாங், ஜூலை 30 – அமெரிக்க அரசு, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை உருவாக்கினால், அந்நாட்டின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வட கொரியத் தலைநகர் பியங்யாங்கில் நடைபெறும் இராணுவப் பேரணியில், அந்நாட்டு இராணுவத்தின் அரசியல் பிரிவு இயக்குனர் ஹவாங் பியோங்-சோ கூறியிருப்பதாவது:-
“தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் போர் ஒத்திகைகள், வட கொரிய வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. வட கொரியாவின் இறையாண்மைக்கும், அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்து வகையில் அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால்,
அந்நாட்டின் வெள்ளை மாளிகை மற்றும் இராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்க தயங்க மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார். வட கொரிய இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தலைவரான அவரது பேச்சு, உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.