டெல்லி, ஆகஸ்ட் 5 – “இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கும், சிறைப்பிடிப்பு நடவடிக்கைக்கும் ஆளாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்’ என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாஜக தலைவர்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் தமிழக பாஜக குழுவினர் சுஷ்மா ஸ்வராஜை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை காலையில் சந்தித்தனர்.
பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், மூத்த தலைவர் இல. கணேசன், எச். ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன், மோகன்ராஜுலு உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் இலங்கைக் கடற்படை நடவடிக்கையைக் கண்டித்து மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம், இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள், மீன் பிடி வலைகள் உள்ளிட்டவையை மீட்பது தொடர்பாக அவர்கள் சுஷ்மா ஸ்வராஜிடம் பேசினர்.
அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது, “ தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும், தமிழகம் மட்டுமின்றி அணைத்து மாநில மீனவர்களின் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.