சிங்கப்பூர், ஆகஸ்ட் 6 – மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் மத்திய கிழக்கு நாடுகளை ஆசியா பெரிதும் சார்ந்து உள்ளது. தீவிரவாதம் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது இங்கு தொடர் விலை ஏற்றம் இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் பெஞ்ச்மார்க் மேற்கு டெக்சஸ் இடைநிலையின் படி செப்டம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோக மதிப்பு 14 சென்ட்ஸ் உயர்ந்து 98.43 அமெரிக்கா டாலர்களாகவும், அதேபோல் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 19 சென்ட்ஸ் உயர்ந்து 105.60 அமெரிக்க டாலர்களாகவும் அதிகரித்துள்ளன.
இது குறித்து வர்த்தக ஆலோசகர் டெஸ்மாண்ட சுவா கூறுகையில், “மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக எண்ணெய் வளம் பாதிக்கப்பட வில்லை. எனினும், வர்த்தக முதலீட்டாளர்களுக்கு அத்தகைய பயம் தொடர்ந்து இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவிலும் கடும் உயர்வை சந்தித்துள்ள கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பங்கள் ஆகும்.
அங்கு போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் கடந்த மாதம் ஜூலை 13-ம் தேதி வரை பலி எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் மிகப்பெரும் எண்ணெய் வளம் கொண்ட நாடான ஈராக், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அந்த தீவிரவாத அமைப்பு வடக்கு ஈராக்கில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தை கைப்பற்றியது. இதன் மூலம் சுமார் 20,000 பேரல் அளவிற்கான உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான ஈராக், நாள் ஒன்றிற்கு 3.4 மில்லியன் பேரல்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.