Home நாடு அரசியல் பார்வை : காலிட் நீக்கம் : சிலாங்கூர் சிக்கலில் மக்கள் கூட்டணி கட்சிகளின் அரசியல்...

அரசியல் பார்வை : காலிட் நீக்கம் : சிலாங்கூர் சிக்கலில் மக்கள் கூட்டணி கட்சிகளின் அரசியல் சதுரங்கம்

692
0
SHARE
Ad

Khalid Ibrahim - Anwar Ibrahimகோலாலம்பூர்,  ஆகஸ்ட் 10 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி உறுப்பியக் கட்சிகளுக்கும் இடையில் உள்ள முக்கிய அரசியல் வேறுபாட்டை நாம் உணர்ந்து கொண்டால், சிலாங்கூரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் சர்ச்சைகளையும் நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

மலேசியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தேசிய முன்னணி என்ற கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் யார் பெரியவன் என்ற போட்டியில்லை.

காலப்போக்கில் ஒவ்வொரு கட்சியும் அவரவர் நிலைப்பாட்டை, பலம், பலவீனங்களை உணர்ந்து, தங்களுக்குள்ளாகவே ஓர் வரைமுறையை அவை வகுத்துக் கொண்டுள்ளன.

#TamilSchoolmychoice

அதன்படி, அம்னோதான் அங்கு பெரிய தலை. பிரதமர், துணைப் பிரதமர், மந்திரி பெசார் பதவிகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அதனை மற்ற கட்சிகள் யாரும் எனக்குத்தான் என மல்லுக்கட்ட மாட்டார்கள்.

BN Logoமசீசதான் இரண்டாவது பெரிய கட்சி. அதற்குரிய பதவிகள் நிர்ணயிக்கப்பட்டு அவை பிரச்சனையின்றி ஒதுக்கப்பட்டு விடும்.

மஇகாதான் மூன்றாவது பெரிய கட்சி. அதன் பின்னர் வருபவை மற்ற கட்சிகளும், சபா, சரவாக் கட்சிகளும்.

அதே போல், பினாங்கு என்று வரும்போது, கெராக்கான்தான் முதலமைச்சரை முடிவு செய்யும்.

சபா, சரவாக் விவகாரங்களில் மசீச, மஇகா, கெராக்கான் கட்சிகள் மூக்கை நுழைப்பதோ, பிரதமரின் முடிவுகளில் தலையிடுவதோ இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் என்று வந்து விட்டால், அவர்கள் அனைவரும் போட்டியிடுவது, ஒரே தேசிய முன்னணி சின்னத்தின் கீழ்தான்!

இப்படியாக யார் பெரியவர் என்பதிலிருந்து யார் யாருக்கு என்ன அரசியல் இடம் என்பதிலிருந்து – எந்த சின்னத்தில் போட்டி என்பது வரை தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்குள் ஒரு வரைமுறை இருக்கின்றது.

மக்கள் கூட்டணியில் யார் பெரியவன் என்ற போட்டி!

PAS-Logo-Sliderமக்கள் கூட்டணிக் கட்சிகளிலோ இத்தகைய அரசியல் நிலைமை நேர் எதிர்.

தேர்தல் என்று வந்தால் இன்று வரை அவை தங்களின் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன. தங்களின் சொந்த அடையாளத்தை – சின்னத்தை – அரசியல் கொள்கைகளை – மக்கள் கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க அதில் உள்ள எந்த உறுப்பியக் கட்சியும் தயாராக இல்லை.

அவ்வாறு விட்டுக் கொடுத்தால், தங்களின் சுய அடையாளம், தங்களின் அடித்தளம் சிதைந்து விடும் – இத்தனை நாள் கட்டிக் காத்த அரசியல் கோட்டை சரிந்து விடும் என்ற அச்சம் அவர்களை ஆட்டிப்படைக்கின்றது.

அன்வார் இப்ராகிமின் ஆளுமை – அரசியல் திறன் – ஏற்கனவே துணைப் பிரதமராக இருந்த அரசாங்க அனுபவம் – இன பேதமின்றி கூட்டம் சேர்க்கும் அவரது பேச்சுத் திறன் ஆகியவற்றுக்காக அவரை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், மக்கள் கூட்டணித் தலைவராகவும் ஏற்றுக் கொள்கின்றார்களே தவிர,

பிரதமர் பதவி என்று வந்தால் பாஸ் கட்சி ஏன் எங்களுக்குத் தகுதியில்லையா என கேள்வி தொடுக்கும்.

மந்திரி பெசார் பதவி என்று வந்தாலும் பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் எப்போதும் போட்டி. கிளந்தான், திரெங்கானு மாநிலங்கள் மட்டும் விதிவிலக்கு.

இவற்றுக்கிடையில் மக்கள் கூட்டணிக் கட்சிகளுக்குள் எப்போதும் இழையோடும் இன்னொரு பிரச்சனை நமக்குள் யார் பெரியவர் – யாருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற இழுபறி.

சிலாங்கூரில் நகர்த்தப்பட்ட அரசியல் காய்கள்

Wan Azizah Wan Ismailஇந்த சூழ்நிலையில் சிலாங்கூரில் பாஸ் கட்சி தனது அரசியல் காய்களை நகர்த்தி நான்தான் பெரியவன் என்று காட்டிக் கொண்டு, மந்திரி பெசார் பதவியைக் கைப்பற்றப் பார்க்கின்றது.

கூட்டணி தர்மத்திற்கு முரணாக, மக்கள் கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, பாஸ் தனது ஷூரா எனப்படும் உயர்மட்ட அரசியல் குழுவைக் கூட்டி நடப்பு மந்திரி பெசார், காலிட் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்தது.

அன்வார் இப்ராகிமும் அரசியல் வியூகங்களை வகுப்பதிலும் – வகுக்கப்பட்ட வியூகங்களை உடைப்பதிலும் யாருக்கும் சளைத்தவரல்ல.

பாஸ் கட்சியின் வியூகத்தை முறியடிக்கும் வண்ணம் நேற்று, காலிட் இப்ராகிமை கட்சியிலிருந்தே நீக்கும் காட்சியை பிகேஆரில் அன்வார் இப்ராகிம்  அரங்கேற்றியிருக்கின்றார்.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் மக்கள் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பாஸ் கட்சி இனியும் பிகேஆர் கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு ஆதரவு தர முனையாது.

PAS President Hadi Awang  300-200அதே வேளையில் பாஸ் கட்சி, மக்கள் கூட்டணியை உடைக்கும் முயற்சியிலோ – மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவையோ நிச்சயம் எடுக்காது என்று நம்பலாம்.

காரணம், இன்றைக்கு, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் பாஸ் கட்சி மீது கடுங் கோபத்தில் இருக்கின்றனர். சிலாங்கூர் மாநிலத்தில் அரசியல் பிரச்சனை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு பாஸ் கட்சியின் குளறுபடிகளே காரணம் என்று மக்கள் நம்புகின்றார்கள்.

எனவே, மக்கள் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி விலகினாலும், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் பிகேஆர்-ஜசெக இரண்டும் இணைந்து மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்ற முடியும்.

ஆனால், பாஸ் கட்சியால் சிலாங்கூரில் ஒரு சட்டமன்றத்தைக் கூட தனியாக நின்று வெல்ல முடியுமா என்பது சந்தேகமே!

அம்னோவோடு இணையும் முடிவை பாஸ் எடுத்தால், அதோடு பாஸ் கட்சியின் செல்வாக்கு அதலப் பாதாளத்திற்கு சரியும்.

அந்த முடிவால் அம்னோதான் பலப்படுமே தவிர – அம்னோதான் மேலும் சில தொகுதிகளை வெல்லுமே தவிர – பாஸ் கட்சிக்கு அதனால் எந்தவித சாதகமும் இருக்கப் போவதில்லை.

பாஸ் கட்சி மக்கள் கூட்டணியை விட்டு வெளியேறினாலோ, அம்னோவோடு Anwar-Ibrahim- 298 x 295இணைந்தாலோ- பாஸ் இரண்டாக உடையும் என்பது மட்டும் உறுதி.

காரணம், பாஸ் கட்சியில் இருக்கும் மலாய்-இஸ்லாம் முற்போக்கு உணர்வுள்ளவர்கள் மட்டும்தான் அம்னோவுடன் இணைவதை விரும்புகின்றார்களே தவிர, முற்போக்கு அரசியல் சிந்தனை கொண்ட பிரிவினர், அம்னோவுடன் சேருவதையோ, மக்கள் கூட்டணியிலிருந்து விலகுவதையோ விரும்பவில்லை.

எனவே, அவர்கள் பாஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். புதிய கட்சி காண்பார்கள்.

இந்நிலையில்,

இந்த பின்விளைவுகளை நன்கு உணர்ந்துள்ள பாஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ஒன்றிணைந்து, வேறு வழியின்றி, மக்கள் கூட்டணியின் மற்ற கட்சிகளோடு இணைந்து ஒத்துழைத்து, சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் பதவியை, பிகேஆர் கட்சியே முடிவு செய்யும் என்ற தார்மீகக் கடப்பாட்டை ஆதரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

DAP Logo 298 x 295அதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தை மக்கள் கூட்டணியே தொடர்ந்து ஆட்சி செய்யும் நிலைமையை மறு உறுதிப்படுத்தி – பிகேஆர் தலைவர் வான் அசிசாவை மந்திரிபெசாராக முன் மொழியும் தீர்மானத்தை ஆதரிக்கும்  முடிவையும் பாஸ் எடுக்கும்.

இல்லாவிட்டால், பாஸ் கட்சியின் அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்பது அந்தக் கட்சியில் உள்ள அரசியல் அனுபவசாலிகளுக்கும் நன்கு தெரியும்.

பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும், மக்கள் கூட்டணிக்கும், பிகேஆர் கட்சிக்கும் எதிரான தாறுமாறான செய்திகளில் பெரும்பான்மையானவை தேசிய முன்னணிக்கு சாதகமான தகவல் ஊடகங்கள் மக்கள் கூட்டணி கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

-இரா.முத்தரசன்