கடலூர், ஆகஸ்ட் 25 – கடலூரில் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, “பாமக ஆட்சி அமைத்தால் மதுவை ஒழிப்போம்.
குடியிலிருந்து குடும்பங்களை காப்போம். வருங்கால தலைமுறைகளை குடிக்கு அடிமையாகாமல் தடுப்போம் என பெண்களிடம் உறுதி கூறுங்கள். பாமகவுக்கு ஓட்டளிப்போம் என அவர்களிடமிருந்து சத்தியம் வாங்குங்கள்.
ஆடம்பர அரசியல் தேவையில்லை. மக்களுக்கு பணியாற்றுங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுங்கள். போராட்டமே நம் வாழ்க்கையாகும். இளைஞர்களின் சக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்பட வேண்டும்.
அனைத்து திரைப்பட கலைஞர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மது, புகை காட்சிகளை ஆதரிக்க வேண்டாமென கடிதம் எழுதியுள்ளேன். அவர்களிடமிருந்து இதுவரை பதில் இல்லை. பதில் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் சிறுவர்களும், இளம்பெண்களும் மது அருந்துவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் போதை பொருட்கள் மாணவர்களிடையே தாராளமாக விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனவே முதற்கட்டமாக குடியிருப்பு பகுதிகள், கல்வி நிலையங்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த உள்ளேன் என ராமதாஸ் கூறினார்.