கெய்ரோ, செப்டம்பர் 9 – எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு எதிரான வழக்கில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியதால், அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் ஏற்பட்டன. இறுதியா கடந்த ஆண்டு அவர் அந்நாட்டு இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது மற்றும் 2011–ம் ஆண்டில் சிறையை உடைத்து கைதிகளை விடுவித்தது என 3 கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர், கத்தார் நாட்டுக்கு எகிப்தின் இராணுவ ரகசியங்களை விற்றதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அதனைத் தொடர்ந்து மோர்சி உள்பட 10 பேர் மீது, இது தொடர்பான பல கடுமையான சட்ட பிரிகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மோர்சி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எகிப்து சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முகமது மோர்சிக்கு உதவிய முஸ்லிம் சகோதர கட்சிக்கும், கத்தார் அரசுக்கும் இடையே சுமுக உறவு இருந்தது. மோர்சியின் பதவி நீக்கத்தின் போது எகிப்துக்கும் கத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.