Home நாடு பக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்

பக்காத்தான் தலைவர்களிடையே விரிசல்கள் – மனக்கசப்புகள்

569
0
SHARE
Ad

wan-azizahகோலாலம்பூர், செப்டம்பர் 9 – சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் பக்காத்தான் எனப்படும் மக்கள் கூட்டணி தலைவர்களிடையே கடுமையான விரிசல்களும், ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புகளும் உருவாகியுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ளது.

பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தம்மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதல் – எதிர்மறை விமர்சனங்கள் தமக்கு சற்றே மனக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது என பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவரும் , சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவி வேட்பாளருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

“என்னுடைய திறமை, தகுதி குறித்து ஹாடி வெளியிட்டிருக்கும் கருத்துகளை நான் மதிக்கிறேன். இருப்பினும், அதைக்கண்டு நான் கோபமடையவில்லை. மாறாக, என்னை நான் திருத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பாக நான் அதை எடுத்துக்கொள்கிறேன்” என்று வான் அஸிசா கூறினார்.

#TamilSchoolmychoice

இவ்விவகாரம் தொடர்பில் ஹாடியை கண்டிக்கும் பதிலறிக்கை எதையும் வெளியிட வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் தாம் ஆலோசனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு சுமையைக் கொடுக்கும் அம்னோ – தேசிய முன்னணியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில்தான் நம்முடைய கவனம் அனைத்தும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

1999-ம் ஆண்டிலிருந்து தமக்கு உதவிவரும் ஹாடிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தாம் நன்றி சொல்லக் கடைமைப்பட்டிருப்பதாகவும் வான் அஸிசா தெரிவித்தார்.

எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பல்வேறு வகைகளில் ஆதரவாகவும், உதவியாகவும் இருக்கும் பாஸ் கட்சியின் தலைமைத்துவத்தையும் அதன் உறுப்பினர்களையும்  அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

பிரச்சனையைப் பெரிதாக்காமல் அடக்கி வாசிக்க வான் அசிசா முற்பட்டிருப்பதை அவரது அறிக்கை எடுத்துக் காட்டினாலும், மக்கள் கூட்டணித் தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் மனக் கசப்பும் விரிசல்களும், எதிர்காலத்தில் மக்கள் கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே பிகேஆர் கட்சிக்கென நிர்ணயிக்கப்பட்ட மந்திரி பெசார் பதவிக்கே இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருக்குமானால், நாளை எப்படி இவர்கள் பெரும்பான்மை நாடாளுமன்றத்தை வென்று, ஒரு மனதாக ஒருவரை பிரதமர் வேட்பாளராக ஒப்புக் கொள்ளப் போகின்றார்கள் என்ற கேள்வியும் விரக்தியும் பொதுமக்களிடையேயும் அரசியல் ஆர்வலர்களிடையேயும் ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காண முடிகின்றது.

அம்னோவும், தேசிய முன்னணி தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் கூட்டணிக்கு எதிரான தங்களின் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருப்பதும் மக்கள் கூட்டணிக்குப் பாதகமாக அமைந்துள்ளது.