கான்பெரா, செப்டம்பர் 23 – உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கவனம் தற்போது ஈராக் மற்றும் சிரியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பி உள்ளதால் அந்நாட்டு அரசு மிகக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டு குடிமக்களின் சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் விமர்சனம் செய்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தப்போவதாகவும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி முக்கியத் தலைவர்களை கொல்ல சதி செய்து இருப்பதாகவும் அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தீவிரவாதிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் புதிய சட்டங்களை இயற்றவும் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உச்சகட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களின் படி, சந்தேகப்படும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கவும், சந்தேகப்படும் நபர்களை உடனடியாக கைது செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் நகரங்களுக்கோ அல்லது பகுதிகளுக்கோ ஆஸ்திரேலியர்கள் பயணிப்பதும் தடை செய்யப்பட உள்ளது.
இத்தகைய சட்டங்களால் குடிமக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ள நிலையில், இதனை ஒப்புக் கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் அபோட், புதிய சட்டங்கள் தொடர்பாக கூறியதாவது:-
“நாட்டு மக்களின் சுதந்திரம் புதிய சட்டங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனிடையே அரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.