Home இந்தியா செல்ஃபியால் விபரீதம்! டில்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை புலி கொன்றது!

செல்ஃபியால் விபரீதம்! டில்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை புலி கொன்றது!

726
0
SHARE
Ad

Tiger attack  (1)

புதுடில்லி, செப்டம்பர் 24 – உலகம் முழுவதும் இளைஞர்களிடையே தற்போது நிலவும் செல்ஃபி (தம்படம்) மோகம் உயிருக்கே ஆபத்தாய் முடியும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது.

அண்மையில், போர்ச்சுகல் நாட்டின் காபோ டா ரோகா என்ற இடத்தில் உள்ள உயரமான இடமான எட்ஜ் ஆஃப் எ கிளிஃப் (edge of a cliff) என்ற சுற்றுலாத்தளத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், தங்களது திறன்பேசியின் வழி செல்ஃபி (தம்படம்) எடுக்க முயற்சி செய்த போது தவறி விழுந்து பலியாகினர்.

#TamilSchoolmychoice

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்தியாவில் நேற்று மீண்டும் ஒரு செல்ஃபியால் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டில்லியில் உள்ள விலங்கியல் பூங்காவை, நேற்று பார்வையாளர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, 22 வயது வாலிபர் ஒருவர், வெள்ளை புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றார்.

Tiger attack  (2)

புலி உலாவரும் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி மீது ஏறி, புலியுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். அங்கிருந்த காவலாளிகள் எவ்வளவு கூறியும் அவர் கேட்காமல் தொடர்ந்து செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

அப்போது, திடீரென தவறி, புலி நடமாடும் பகுதிக்குள் விழுந்தார்.உள்ளே விழுந்த அந்த வாலிபரை ஒன்றும் செய்யாமல், சில நிமிடங்கள் அங்கிருந்த வெள்ளை புலி பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது, மிருகக்காட்சி சாலைக்கு வந்த பார்வையாளர்களில் சிலர், புலியை நோக்கி கற்களை வீசினர். அத்துடன், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும், புலி நடமாடும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியை தட்டி சப்தமிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த வெள்ளை புலி, வாலிபரின் கழுத்தை கவ்வி இழுத்துச் சென்றது. விலங்கியல் பூங்காவின் பாதுகாவலர்கள், வாலிபரை பாதுகாக்க, எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tiger attack  (3)

வாலிபரின் கழுத்தை புலி கவ்விச் சென்று கொல்லும் காட்சியை, பூங்காவிற்கு வந்திருந்த பார்வையாளர்களில் சிலர், தங்களின் செல்பேசிகளில் படமெடுத்தனர்.

சம்பவம் நடந்த பல மணி நேரங்கள் வரை, வாலிபரின் உடலை மீட்க, காவல்துறையோ அல்லது விலங்கியல் பூங்கா அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பாக, கருத்து எதுவும் தெரிவிக்கவும், விலங்கியல் பூங்கா அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

வாலிபரை வெள்ளைப் புலி கொடூரமாக தாக்கி கொல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி யூடியூப்பில் வெளியிடப்பட்டது:-

http://www.youtube.com/watch?v=j9vU6XkNIZ4