கோலாலம்பூர், செப்டம்பர் 24 – அன்வார் இப்ராகின் விசுவாசியாக இருந்து என்றுமே போராட்டக் களங்களில் முன் நின்ற அஸ்மின் அலி, தனது அரசியல் நிலைப்பாடு காரணமாக, தனது சொந்த குடும்பத்தை எதிர்த்தும் அரசியல் நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அன்வார் இப்ராகிமிற்கு எதிராக 1998ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அஸ்மின் அலியின் சொந்த சகோதரி உம்மி அபில்டா அன்வாருக்கு எதிராக சாட்சியங்கள் கூற, அஸ்மின் அலியோ, தனது தலைவன் பக்கமே உறுதியுடன் நின்றார்.
நீதிமன்றத்தின் உள்ளே உம்மி அபில்டா அன்வாருக்கு எதிரான சாட்சியங்கள் கூறிக் கொண்டிருக்க, நீதிமன்றத்திற்கு வெளியே அன்வாருக்கு ஆதரவாகத் திரண்ட ஆதரவாளர்கள் கூட்டத்தை சேர்ப்பதிலும், அவர்களை ஒழுங்குபடுத்துவதிலும் அஸ்மின் அலி முன்னின்று களப்பணி ஆற்றிய காட்சிகள் அந்த காலகட்டத்தில் அரங்கேறின.
அதன் காரணமாக, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கசப்புணர்வு கொண்ட பனிப்போர் நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு ஆண்டுகளுக்கு முன்பாக, அஸ்மின் அலியின் தாயாரே தகவல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் எனது மகன் என்னைப் பார்க்க நீண்ட காலமாக வரவில்லை என வருத்தமுடன் கூறியிருந்தார்.
ஆனால், கடந்த ஹரிராயா பெருநாளின் போது, அஸ்மின் அலி தனது தாயாரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், தற்போது அவருக்கும் அவரது தாயாருக்கும் சுமுகமான குடும்ப உறவு நிலவுவதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்தன.
எந்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக, குடும்பத்துடன் கசப்புணர்வு ஏற்பட்டதோ, அந்த அரசியல் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து மன உறுதியோடு பயணம் செய்து,
அஸ்மின் அலி இன்றைக்கு பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும், சிலாங்கூர் மந்திரி பெசாராகவும் அரசியல் வானில் உயர்ந்திருப்பதால், தற்போது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மீண்டும் நெருக்கமும், பாசப் பிணைப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தனது தாயாரிடம் ஆசி பெற அவர் தனது குடும்ப இல்லம் வந்தார். மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்ற பின்னர் கம்போங் கிள்ளான் பாருவில் உள்ள அவரது தாயாரின் வீடு இதனால் களைகட்டியது.
அங்கு நடந்த கொண்டாட்டங்களுக்கு இடையே அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் துணை மந்திரி பெசார் குறித்த ஆருடங்களை உறுதிபட மறுத்தார்.
சிலாங்கூர் துணை மந்திரி பெசாராக பாஸ் கட்சியை சேர்ந்த இஸ்கந்தர் அப்துல் சமாட் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
“துணை மந்திரி பெசார் என்ற பேச்சே தற்போது எழவில்லை,” என்றார் அவர்.