கோத்தா கினபாலு, செப்டம்பர் 25 – கடந்த 1986 -ம் ஆண்டு மலேசியாவில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 16,742 பேர் அந்த நோய் தாக்கி பலியாகியுள்ளதாக அறிக்கை கூறுகின்றது.
மலேசியாவின் உலக எய்ட்ஸ் அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2014 -ம் ஆண்டின் அறிக்கையின் படி, 1986 -ம் ஆண்டு முதல் 2013 வரை 101,672 எச்ஐவி பாதிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 16,340 பேர் எச்ஐவி/ எய்ட்ஸ் நோய் பாதிப்பில் உயிரிழந்துள்ளதாகவும் மகளிர்,குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சித்துறையின் துணையமைச்சர் டத்தோ அசிசா முகமட் டன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 2014 தொடங்கி ஜூன் மாதம் வரையில் 1,676 எச்ஐவி பாதிப்பு சம்பவங்களும், 598 எயிட்ஸ் பாதிப்பு சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அசிசா தெரிவித்தார்.
இந்த 598 பேரில் 402 பேர் இறந்துவிட்டனர் என்று நேற்று நடைபெற்ற எச்ஐவி/ எய்ட்ஸ் கருத்தரங்கில் அசிசா தெரிவித்தார்.
இந்த ஆண்டு எச்ஐவி பாதிப்பிற்குள்ளானவர்களில் 1,337 பேர் ஆண்கள் என்றும் அசிசா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நாடெங்கிலும் எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 3,393 ஆக இருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையில் 728 பேர் அதிகரித்துள்ளனர் என்றும் அசிசா குறிப்பிட்டார்.
குறிப்பாக சபா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 133 எச்ஐவி பாதிப்பு சம்பவங்களும், 53 எய்ட்ஸ் பாதிப்பு சம்பவங்களும், அதில் 22 பேர் நோய் முற்றி பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.