செப்டம்பர் 27 – ஏலக்காய் என்பது இனிப்பு, காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.
ஏலக்காய் ஒரு வாய்வு அகற்றி ஆகும். வாந்தி மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. நுண்கிருமிகளை அழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது. வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது.
ஏலக்காயில் மாவுச்சத்து, புரதச் சத்து, நார்சத்து வைட்டமின் சத்துக்களான வைட்டமின் சி, ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களும் உள்ளன.
ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.
ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது. ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.
வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும்.
குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது. இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது.
ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.
ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை ஏற்படுத்தி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்.