Home உலகம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

633
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம், அக்டோபர் 7 – இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 3 பேர் இப்பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மனித மூளையில் உள்ள அணுக்களின் (செல்) செயல்பாடு குறித்து இவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் வழி பல்வேறு வியத்தகு விஷயங்களைக் கண்டறிந்தமைக்காக இந்த உயரிய பரிசு கிடைத்துள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்கும் விதம் மற்றும் சிக்கலான சூழ்நிலையில் அதற்கேற்ப நம்மை எப்படி வழிநடத்திச் செல்கிறது? என்பதை ஆய்வின் மூலம் மூவரும் விளக்கி உள்ளனர்.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் ஓ கேஃபே, நோர்வேயைச் சேர்ந்த தம்பதியரான மே பிரிட் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோரே நோபல் மருத்துவத் துறை பரிசுக்குரிய சாதனையாளர்கள்.Nobel Prize winners  for Medicine

(இடமிருந்து வலம் – மருத்துவத் துறை நோபல் பரிசு பெற்ற எட்வர்ட் மோசர், ஜோன் ஓ  கேஃபே, மே-பிரிட் மோசர்)

மனித மூளைக்குள்ளும் ஒரு ‘ஜிபிஎஸ்’ (GPS) – அதாவது வழிகாட்டும் உணர்வு – உள்ளது என்றும், இதன் மூலமே மனிதர்களால் எங்கு உள்ளோம், எங்கு செல்கிறோம், எப்படிச் செல்லப் போகிறோம்? என்பதைக் கண்டறிய முடிகிறது என்பதே இவர்களது ஆராய்ச்சியின் மையக் கருவாகும்.

எலி காட்டிய வழி

ஜோன் கேஃபே தற்போது லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையின் இயக்குநராக உள்ளார். கடந்த 1971 முதல் இவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட அறையில் ஆய்வுக்காக ஒரு எலியை விட்டபோது, அதன் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்ற குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு நரம்பணு மட்டும் எப்போதுமே செயல்பட்டு கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார்.

அந்த எலி, அறையின் வெவ்வேறு பகுதிக்கு நகரும்போது, அதன் மூளையின் மற்ற நரம்பணுக்களும் செயல்படத் தொடங்கியதை அவரால் கண்டறிய முடிந்தது. இந்த அணுக்கள் உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்தபோது, அந்த எலி இருந்த அறையின் வரைபடம் போல் காட்சியளித்தது.

இந்தக் கண்டுபிடிப்பே இன்று அவர் நோபல் பரிசு பெற வித்திட்டது எனலாம்.
மனிதர்களும், விலங்குகளும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதில் மூளையின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பிலான இவரது ஆய்வின் முடிவுகள் நமக்குப் பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்களை தெரிவிக்கின்றன.

தம்பதிகளின் ஆய்வு சாதனை 

மற்ற இரு சாதனையாளர்களான மே – பிரிட் மோசர் தம்பதியர் நோர்வேயில் உள்ள அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறார்கள். மூளையின் ஹிப்போ கேம்பஸ் பகுதியின் செயல்பாடு குறித்து இருவரும் ஜோன் கேஃபேயிடம் இருந்துதான் முதலில் கற்று அறிந்தனர்.

இதையடுத்து பத்து ஆண்டுகளுக்குப் ஜோன் கேஃபே போலவே மூளை அணுக்களின் செயல்பாடுகள் குறித்து இருவரும் தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். இதன் முடிவில் விலங்குகளின் ‘நகர்தல்’ குறித்த அரிய விஷயங்களைக் கண்டுபிடித்தனர்.

மொத்தத்தில் மனித மூளையால் பல்வேறு பாதைகளை, வழித்தடங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்க முடிகிறது? எப்படி ஒரு பாதையை அடிப்படையாக வைத்து பயணம் மேற்கொள்ள முடிகிறது?

தூக்கம் மற்றும் கனவுகளுக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையின் செயல்பாட்டிற்கு இவற்றின் பங்களிப்பு என்ன? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாண இந்த 3 சாதனையாளர்களும் வழிவகுத்திருக்கிறார்கள்.

மருத்துவ நோபல் பரிசுக்குரிய 1.1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில் பாதி ஜோன் ஓ கேஃபேக்கு வழங்கப்படும். மீதித் தொகை நோர்வே தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.

மனித மூளை உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் என்றால், இந்த சாதனையாளர்களும் மனித இனத்தின் ஆச்சரியக் குறிகளே!