பாங்காக், அக்டோபர் 7 – தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தாய்லாந்தின், கிராபி பகுதியில் புயல் காற்றில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் 2 இந்திய சுற்றுலா பயணிகள் நேற்று பலியாகினர்.
ஃபிஃபி தேசிய பூங்காவைப் பார்வையிட, தாய்லாந்தின் பாரம்பரியமான நீண்ட படகில் அத்தம்பதியர் சென்று கொண்டிருந்தபோது, புயலில் சிக்க நேர்ந்தது.
மூன்று மீட்டர் உயரத்திற்கு எழும்பிய அலைகளின் காரணமாக ‘ஆ நாங்’ கடற்கரைக்கு நூறு மீட்டர் தொலைவில் அப்படகு மூழ்கியது.
இருவருமே உயிர் காக்கும் கவச ஆடைகளை அப்போது அணிந்திருக்கவில்லை. தகவல் கொடுக்கப்பட்ட 40 நிமிடங்களுக்கு பிறகே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
கவிழ்ந்த படகை இயக்கியவர் எப்படியோ அதன் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்தார். பின்னர் கரைக்கு மீட்டு வரப்பட்டவரிடம் தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.