கோலாலம்பூர், அக்டோபர் 20 – நிலக்கரி எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களின் மூலம் அதிகரித்து வரும் கார்பன் எனப்படும் கரியம் உமிழ்வைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
நீர் , எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறையின் அமைச்சகம் நிலக்கரி எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களில் அதிகரித்து வரும் கார்பன் உமிழ்வினைக் கட்டுப்படுத்த சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் கூறுகையில், “கட்டுமானப் பணியில் உள்ள புதிய நிலக்கரி எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரியை உருவாக்க ‘அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் நிலக்கரி தொழில்நுட்பம்’ (Ultra Supercritical Clean Coal Technology) பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதன் மூலம் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மின்னுற்பத்தியில் நிலக்கரி அதிக பங்கு வகிக்கும் நிலையில், நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் எதிர்வரும் 2020-ம் ஆண்டில், 40 சதவீத அளவிற்கு கார்பன் குறையும் என்று கூறப்படுகின்றது.
இதனால் தற்போது எரிசக்தியையும், எதிர்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனினும், தற்போது அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என எரிசக்தி துறையின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த விரைவில், ‘பசுமை முதலீட்டு வரி படிகள்’ (Green Investment Tax Allowance) மற்றும் வருமான வரி விலக்கு போன்ற சில திட்டங்களை, அரசு அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.