கொழும்பு, அக்டோபர் 20 – விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு விலக்கு அளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இலங்கை அரசு மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகள் பெயரை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம், கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், இந்த தீர்ப்பானது விதிமுறைகளின் கீழ் மூன்று மாதங்களுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. எனினும், இலங்கை அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக இரண்டு மாதங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவினைத் திரட்ட, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதர் ராட்னி பெரேரா, பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்கு இன்று பயணம் மேற்கொள்வார் என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கு நடைபெற இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரு குழுக்களிடம் விடுதலைப் புலிகள் தடை நீக்கம் தொடர்பான விவாதங்களை நடத்துவார் எனத் தெரிகின்றது.
2006-ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீதான கண்ணோட்டம் தற்போது பொருத்தமற்றது என ஐரோப்பிய நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.