ஒட்டாவா, அக்டோபர் 23 – நேற்று கனடாவின் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், உள்நாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் கனடா நாடாளுமன்றக் கட்டிடத்தில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டன என்றும் அதற்கு முன்பாக அருகில் உள்ள போர் நினைவகத்தில் கனடா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் வெளியான தகவல்களினால் கனடியத் தலைநகர் முழுக்க அதிர்ச்சி அலைகள் பரவின.
கனடா நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை தங்களின் கைவசம் கொண்டுவர அவசரமாக ஆயுதங்களுடன் இறங்கும் கனடா நாட்டு பாதுகாப்புப் படையினர்…
தாக்குதல் நடத்திய துப்பாக்கிக்காரன் பின்னர் பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டான். பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பின்னர் பாதுகாப்புடன் நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து வெளியேறினார்.
ஒரே வாரத்தில் இரண்டாவது உயிர்ப்பலி சம்பவம்
கனடிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுவது இந்த வாரத்தில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது சம்பவமாகும். இதன் பின்னணியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக முதல் கட்ட விசாரணைகளின் வழி தெரிய வந்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பாதுகாப்பு படையைச் சேர்ந்தவரின் பெயர் நாதன் சிரில்லோ (Nathan Cirillo) என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே குழுமத் தொடங்கும் தகவல் ஊடகவியலாளர்கள்…
போர் நினைவகத்தில் காவலுக்கு நின்றிருந்த சிரில்லோவை சுட்டுக் கொன்ற தீவிரவாதி பின்னர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்தான் என்றும் அப்போது நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் இருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன என்றும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தகவல் ஊடகங்கள் தெரிவித்தன.
கனடா நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தி பின்னர் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவனின் பெயர் மைக்கல் செஹாஃப்-பிபியூ (Michael Zehaf-Bibeau) என்றும் அவனுக்கு வயது 34 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியவன் இவன் என்றும் ஆரம்பக் கட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மதம் மாறியதற்கு முன்னால் அவன் போதைப் பொருளை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தான் என விசாரணையில் ஈடுபட்டுவரும் கனடிய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவன் தனி ஆளாகத்தான் இயங்கியிருக்கின்றான் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கனடா பிரதமர் “எங்களை பயமுறுத்த முடியாது”
தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் அமைதி நகரங்களில் ஒன்றான ஒட்டாவா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆங்காங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றிரவு முதல் நகரம் சகஜ நிலைமைக்குத் திரும்பியது என்றும் பொதுமக்களுக்கு இனி ஆபத்தில்லை என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக நாட்டிற்கு உரையாற்றிய பிரதமர் ஹார்ப்பர் (படம்) இது போன்ற தாக்குதல்களால் கனடா அச்சம் கொள்ளாது, எங்களை பயமுறுத்த முடியாது என அறைகூவல் விடுத்தார்.
ஈராக், சிரியாவில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களில் கனடா நாட்டு இராணுவமும் இணைந்து கொள்ளும் என அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட முடிவினால் அதிருப்தியுள்ள தரப்பினர் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கலாம் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது.
படங்கள் – EPA