ஒட்டாவா, அக்டோபர் 24 – கனடா நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை, காலை சுமார் 10 மணி அளவில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் துப்பாக்கி குண்டுகள் முழங்கும் சத்தம் கேட்டன.
பரபரப்பான அந்த நிமிடங்களில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவன் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கடும் தாக்குதலில் ஈடுபட்டான். தீவிரவாதி நடத்திய எதிர்பாராத இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி கொல்லப்பட்டான். அமைதியை விரும்பும் தேசமான கனடாவில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கனேடிய பிரதமருடன் தொலைபேசியில் அவர் பேசியுள்ளார்.
அப்போது தாக்குதல் தொடர்பாக ஒபாமா கூறியுள்ளதாவது:- “கனடாவில் நடைபெற்ற இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கின்றது. தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் விதமாக கனடா நாட்டிற்கு அமெரிக்கா துணை நிற்கும்” என்று கூறியுள்ளார்.