சிங்கப்பூர், அக்டோபர் 31 – இழப்பீடாக வழங்க வேண்டிய தொகையை சில்லறைக் காசுகளாக அனுப்பி வைத்து, பெண் வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சிங்கப்பூரில் உள்ள ஒரு கைபேசி விற்பனையகம்.
அப்பெண்மணி சிங்கப்பூரில் உள்ள சிம் லிம் ஸ்கொயர் வளாகத்தில் அண்மையில் 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கொடுத்து ஐஃபோன் ஒன்று வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், நுகர்வோர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை விசாரித்த நுகர்வோர் சங்கம், அவருக்கு 1010 சிங்கப்பூர் டாலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
பலமுறை இது குறித்து கேட்டும் அக்கைபேசி விற்பனையகம் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் திடீரென அப்பெண்மணிக்கு இழப்பீடு வந்து சேர்ந்தது.
ஆனால் 1010 சிங்கப்பூர் டாலரையும் 5 காசு மற்றும் 1 காசு நாணயங்களாக அனுப்பி வைத்துள்ளது அந்தக் கைபேசி விற்பனையகம். இதனால் அப்பெண்மணி கடும் அதிர்ச்சி அடைந்தார்.