கோலாலம்பூர், நவம்பர் 3 – விவேகானந்தா ஆசிரம நிர்வாகத்தை முறையாக நடத்த இயலவில்லை என்றால் விலகிக் கொண்டு மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆசிரம நிர்வாகத்தை அரசு சாரா இயக்கங்கள் சில கேட்டுக் கொண்டுள்ளன.
ஆசிரமத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சுமார் 50 அரசு சாரா இயக்கங்கள் அண்மையில் ஒன்று கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்தன.
ஆசிரமத்தைப் பாதுகாக்க தற்போது நாடு தழுவிய நிலையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ‘பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாப்போம்’ என்ற குழுவில் ஒருவரான ராம்ஜி தெரிவித்தார்.
சுங்கை பட்டாணி, தெலுக் இந்தான் மற்றும் போர்ட் கிள்ளான் ஆகிய இடங்களில் மக்கள் தற்போது மனுவில் கையெழுத்திட்டு வருவதாகவும் ராம்ஜி குறிப்பிட்டார்.
ஆசிர நிர்வாகத்தால் பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க இயலவில்லை மற்றும் ஆசிரமம் மற்றும் அதனை சார்ந்த 5 பள்ளிகளை நிர்வகிக்க இயலவில்லை என்றால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் ராம்ஜி தெரிவித்தார்.
ஆசிரமத்தில் உள்ள கண்டியா அரங்கத்தை புதுப்பித்தால் இந்திய சமுதாயத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு அதைப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆசிர நிர்வாகத்தின் செலவுகளை சரி செய்யலாம் என்றும் ராம்ஜி தெரிவித்தார்.
எனினும், இன்றைய சூழ்நிலையில் அந்த அரங்கத்தை வாடகைக்கு விடுவதும் இயலாது என்றும் ராம்ஜி தெரிவித்தார்.
மேலும், பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா ஆசிரமம் நாட்டிலுள்ள இந்து மக்களுக்கு மிக முக்கியமான ஒரு இடமாகும். அதன் அருகாமையில் 23 அடுக்கு கொண்டு வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வது ஆசிரமத்திற்கு உகந்ததல்ல என்றும் ராம்ஜி தெரிவித்தார்.
தற்போது விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாக்கும் மனு இணையத்திலும் உள்ளதாகவும், அந்த இணையத்தளத்திற்கு சென்று அதில் மக்கள் தங்களது பதிவை செய்யலாம் என்றும் ராம்ஜி குறிப்பிட்டார்.
நமது பாரம்பரிய சின்னமான விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாக்க கீழ்காணும் இணையத்தள பக்கத்திற்கு சென்று மக்கள் தங்களது மனுவை சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
www.ipetitions.com/petition/save-vivekananda-ashram-brickfields.