டாக்கா, நவம்பர் 4 – கடந்த சனிக்கிழமை நவம்பர் 1ஆம் தேதி வங்காளதேச நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாகஅந்நாட்டின் இயல்பு வாழ்க்கை நிலைகுத்தியது. வீடுகள், அலுவலகங்கள், வணிக நிலையங்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் கூட இருளில் மூழ்கின.
மின் தடையால் இருளில் மூழ்கிய டாக்கா நகரின் தோற்றம்…
“ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மின் விநியோகம் சீரடைந்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. தற்போது நாடு முழுவதும் மின் விநியோகம் இயல்பு நிலையில் உள்ளது,” என பின்னர் மின்துறை துணை அமைச்சர் நஸ்ருல் ஹமிட் அறிவித்தார்.
இந்த திடீர் மின்தடை தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைக் குழு தனது பணியை தொடங்கிவிட்டதாகவும் மூன்று தினங்களில் அக்குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு வங்காள தேசம் முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. ஞாயிறு காலை வரை மின்சாரம் திரும்பவில்லை. எனினும் இதன் பின்னர் ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வந்ததும் பொது மக்கள் சாலைகளில் கூடி பலத்த கரவொலி எழுப்பினர். மின்தடையின் போது மக்கள் திறந்தவெளிகளிலும் கட்டடங்களின் கூரைகளிலும் பொழுதைக் கழித்தனர்.
15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தலைநகர் டாக்கா, ஒரு பேய் நகரம் போல் காட்சி அளித்தது. அனைத்து பகுதிகளையும் இருள் சூழ்ந்த நிலையில் மருத்துவமனைகளும் அனைத்துலக விமான நிலையமும் மின் உற்பத்திக்கு இயந்திரங்களின் (ஜெனரேட்டர்களின்) உதவியை நாட வேண்டியிருந்தது.
மின் தடையால் எரிபொருள் வாங்க பெட்ரோல் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்…
நிலத்தடி நீரை விநியோகிக்கும் நீர்வாங்கு குழாய்களும் (மோட்டார் பம்புகளும்) மின்சாரம் இல்லாததால் இயங்கவில்லை. எனவே பெரும்பாலான இடங்களில் தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இந்தியாவில் இருந்து வரும் மின்தட மாற்றி செயல் இழந்ததே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட காரணம் என்று பங்களாதேஷ் பவர் கிரிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு மிக மோசமான புயல் தாக்கியதன் காரணமாக வங்காளதேசம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அதன் பிறகு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மின்தடை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
155 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வங்காளதேசம் மிக மோசமான மின் உற்பத்தி உள்ள நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை விலைகொடுத்து வாங்குகிறது.