பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – சபாவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க 100 மில்லியன் ரிங்கிட் பேரம் பேசப்பட்டது என்று கூறியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தி உள்ளார்.
அம்னோ பொதுப்பேரவையில் பேசிய போதும் பிரதமர் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது முற்றிலும் அபாண்டமானது, அவதூறானது என தெரிவித்துள்ளார்.
இது தனக்கும், பக்காத்தானுக்கும் எதிரான அவதூறு குற்றச்சாட்டு என்றும் அன்வார் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தனக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் குற்றச்சாட்டை தாம் வெளிப்படையாக மறுத்துள்ள நிலையில், பிரதமர் நஜிப் அம்னோ மாநாட்டில் மீண்டும் இதுகுறித்துப் பேசி இருப்பதாக மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.