புது டெல்லி, டிசம்பர் 8 – ஆசிய அளவில் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஆப்பிள், தற்பொழுது தனது கவனத்தை இந்தியாவின் மீது திருப்பி உள்ளது. இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக சுமார் 500 வணிக மையங்களைத் திறக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்த ஆப்பிள், தற்சமயம் இந்திய சந்தைகளின் மீது கவனத்தை திருப்புவதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் அதிகரித்து வரும் திறன்பேசிகளின் வர்த்தகம்.
இதனை முன்பே உணர்ந்த சாம்சுங் இந்திய சந்தைகளில் பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளதாவது:- “இந்த நிலை மாறும். இந்தியாவில் தீவிர வர்த்தகத்தில் இறங்க ஆப்பிள் தயாராகி வருகின்றது” என்று கூறியுள்ளார்.
இந்திய சந்தைகளில் ஆப்பிள் வர்த்தகத்திற்கான வாய்ப்புகள்:
இந்தியாவைப் பொருத்தவரை, திறன்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் 70-75 சதவீத இணைய வர்த்தகம் திறன்பேசிகள் மூலமே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அந்த அளவில் திறன்பேசிகள் விற்பனைகளும் இருக்கும். எனினும், சாம்சுங் மற்றும் சீனத் தயாரிப்புகள் குறைந்த விலையில், பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் அத்தகைய திறன்பேசிகளுக்கே முக்கியத் துவம் அளிப்பர்.
ஆப்பிளைப் பொருத்தவரையில் தரத்திகேற்றார் விலையும் உயர்வாகவே இருக்கும். அதனால் ஐபோன்களை மேல்தட்டு மக்கள் மட்டுமே இதுவரை வாங்கி வந்துள்ளனர். திறன்பேசிகளுக்காக 50,000 ரூபாய் வரை செலவிடுவதற்கான சூழல் இங்கு இந்தியாவில் தற்சமயம் வரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இதனை உணர்ந்துள்ள டிம் குக் கடந்த 2012-ம் ஆண்டு இந்திய வர்த்தகம் பற்றி கூறுகையில், “இந்தியாவை நான் மிகவும் விரும்புகின்றேன். எனினும், வர்த்தக வாய்ப்புகள் இந்தியாவை விட மற்ற நாடுகளில் சிறப்பாக உள்ளன” என்று கூறியுள்ளார்.