உவிரா, டிசம்பர் 15 – ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழனன்று படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 129 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கோவின் மேற்குப்பகுதியான கலேமீயாவிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள உவிரா நகரை நோக்கி சுமார் 350-க்கும் மேற்பட்டோர் எம்.வி.முடம்பாலா என்ற படகில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மோபா, கலேமீ நகரங்களுக்கு இடையே அந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று 232 பேரைக் காப்பாற்றினர். எனினும் மற்றவர்கள் நீரில் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகின்றது.
இதுவரை 129 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடங்கா மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் லாரண்ட் கஹோசி சும்பா தெரிவித்துள்ளார்.
அந்தப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.