Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் மாநில தேர்தல் தலைவராக நஜீப்- தே.மு. மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்றுமா?

சிலாங்கூர் மாநில தேர்தல் தலைவராக நஜீப்- தே.மு. மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்றுமா?

655
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர், பிப்.27- கடந்த 2008 பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பிகேஆரிடம் தேசிய முன்னணி தோல்வியை தழுவியது. அதனால் நெடுங்காலமாக தனது அரசியல் கோட்டையாக இருந்த  சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியை அம்னோவும், தேசிய முன்னணியும் இழந்தன.

இது அக்கட்சிக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவே ஆகும். ஆகவே இப்போது, அம்மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பிரதமர் நஜிப் சிலாங்கூரின் தேர்தல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நஜிப்பால் சிலாங்கூரை கைப்பற்றமுடியுமா?

#TamilSchoolmychoice

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற நஜிப் என்ன வியூகங்களை கடைப்பிடிக்கப் போகிறார் என்பதுதான் இப்போது அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ள கேள்வி!

ஏற்கனவே ஆட்சி மாற்றம் வேண்டும் என்றுதான் மக்கள் பிகேஆரிடம் மாநிலத்தை ஒப்படைத்தனர். அந்த கட்சியும் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றவில்லை.

சிலாங்கூரில், முந்தைய தேசிய முன்னணியின் அரசாங்க ஆட்சியின் போது இருந்த  400 மில்லியன் ரிங்கிட் கையிருப்பை 2500 மில்லியனாக அதிகரித்தும், பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியும் பிகேஆர் கட்சி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் எவ்வாறு ஆளுங்கட்சி தங்கள் தேர்தல் பரப்புரை மூலம், மக்களை திசை திருப்பி அல்லது மனதை மாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறப்போகிறது?

பொதுத் தேர்தல் காலத்தின் போது பிரதமர் சிலாங்கூரை மட்டும் குறிவைத்து தேர்தல் பரப்புரைகளை நிச்சயம்  செய்யமுடியாது. அவர் தமது சொந்த தொகுதியான பெக்கானையும் பார்க்க வேண்டும்.

நாடு முழுமையிலும் உள்ள மற்ற தொகுதிகளையும் அவர் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் மிகக் குறுகிய கால அவகாசத்தில் நஜிப் நாடு முழுவதும் செல்ல வேண்டியுள்ளதால், நிச்சயம் அவரால் சிலாங்கூரில் மட்டும் கவனம் செலுத்தமுடியாது.

ஆகவே ஏற்கனவே வென்ற சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் தக்கவைத்துக்கொள்வது பிகேஆர் கட்சிக்கு ஒன்றும் கடினமான காரியம் அல்ல.

குறிப்பாக அன்வார் இப்ராகிமின் முழுக் கவனமும் சிலாங்கூரில்தான் இருக்கும் என்பதையும் நாட்டிலேயே மிகவும் பணக்கார மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தை முன்மாதிரியாக வைத்துத்தான் பிகேஆர் கட்சியின் அரசியல் ஆதிக்கம் தற்போது இயங்கி வருகின்றது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அம்னோவின் உட்கட்சிப் போராட்டத்தால் சிதறுண்டு கிடக்கும் சிலாங்கூர் மாநிலத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் தலைவலியும் நஜிப்புக்கு உண்டு.

அதே வேளையில், தேசிய முன்னணியின் மற்ற உறுப்பியக் கட்சிகளும் சிலாங்கூரில் பலமிழந்து காணப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்தவித அரசியல் பதவியும் இல்லாமல் சோர்ந்து, தொய்வடைந்து இருக்கும் தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் ஊக்கம் தந்து, உற்சாகம் ஊட்ட வேண்டிய நிலைமையிலும் நஜிப் இருக்கின்றார்.

இதையெல்லாம் சமாளித்துத்தான் அவர் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற முடியும்!

நஜிப் இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற முடியும்!