கோலாலம்பூர், ஜனவரி 12 – மஇகா தலைமையகத்தில் தலைவர்களைத் தவிர மற்றவர்களுக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதியில்லை என திடீர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மஇகா தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் மட்டுமே செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மஇகா பொதுச்செயலாளர் டத்தோ ஜி.குமார் அம்மான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் தலைமையகத்தில் தலைவர்களைத் தவிர மற்றவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த முறைப்படி அனுமதி வாங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மஇகா-விற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையோ, தலைவர்களைப் பற்றிய குறைகளையோ, விளம்பரங்களையோ, விமர்சனங்களையோ முன்வைக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்த எந்த ஒரு தனி நபருக்கும் அனுமதி கிடையாது என்றும் குமார் அம்மான் தெரிவித்துள்ளார்.
முறையான கூட்டங்கள், விழாக்கள் ஆகியவற்றை நடத்த மூன்று நாட்களுக்கு முன்னதாக விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து செயலர் அலுவலகத்தில் கொடுத்து முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் குமார் அம்மான் குறிப்பிட்டுள்ளார்.
அவசரக் கூட்டங்களுக்கு பொதுச்செயலாளரின் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் குமார் அம்மான் தெரிவித்துள்ளார்.