ஜகார்த்தா, ஜனவரி 12 – ஜாவா கடலில் இருந்து விபத்திற்குள்ளான ஏர் ஆசியா 8501 விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியையும் முக்குளிப்பு வீரர்கள் கண்டுபிடித்து மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கண்டறியப்பட்ட விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி இருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில், விமானிகள் அறையின் குரல் பதிவு செய்யும் இரண்டாவது கறுப்புப் பெட்டியையும் மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இந்த இரண்டு கறுப்புப் பெட்டிகளும் தற்போது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. விசாரணையின் முடிவில் விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி, இந்தோனேசியாவின் சுரபாயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஆசியா 8501 விமானம் நடுவழியில் கடும் புயலில் சிக்கியதாக நம்பப்படுகின்றது.
கடுமையான மேகமூட்டம் காரணமாக 9,753 மீட்டர் உயரத்தில் இருந்து 11,582 மீட்டர் உயரத்தில் பறக்க விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நேரத்தில் நிலவிய போக்குவரத்து இடையூறு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் பின்னர், 4 நிமிடங்களில் விமானம் முற்றிலும் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகி கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும், கறுப்புப் பெட்டியை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தினால் மட்டுமே விபத்திற்கான காரணம் கண்டறியப்படும்.