Home இந்தியா ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தை திருத்தி அமைக்க வேண்டும் – பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்!

ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தை திருத்தி அமைக்க வேண்டும் – பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்!

547
0
SHARE
Ad

pranab-mukherjeeபுதுடெல்லி, ஜனவரி 14 – இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், அதிபர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினார். இது குறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது; சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே 1945-ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியா உறுப்பினராகச் சேர்ந்தது.

இதுவரை ஐ.நா. அமைதி பாதுகாப்புப் படை மேற்கொண்ட 16 அமைதி நடவடிக்கைகளில் 10-ல் இந்தியா பங்கேற்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா நீண்டகாலம் வலியுறுத்தி வருகிறது.

இந்தாண்டு அக்டோபர் 24-ஆம் தேதி ஐ.நா. தனது 70-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த தருணத்தில் ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தை திருத்தியமைக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

ஐ.நா.வில் இந்தியாவின் பங்கு குறித்து பாராட்டு தெரிவித்த பான் கி மூன், அனைத்துலக அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு என்பதை குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மற்றும் பாரீஸில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, உலக நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

தற்போது உலகெங்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சனையாக தீவிரவாத செயல்கள் அமைந்துள்ளது. இதில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல் திட்டத்தை வகுத்து, தீவிரவாதத்துக்கு எதிராக மிகக் கடுமையாக போரிட வேண்டும் என்று பான் கி மூன் தெரிவித்தார்.