கோலாலம்பூர், ஜனவரி 16 – மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சைருல் அசார் உமார், ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருக்கின்றார். அவரை மலேசியாவிற்கு திரும்ப அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சட்டப்படி, தங்களது நாட்டிற்குள் புகுந்த ஒருவரை மீண்டும் மரண தண்டனைக்காக அவரது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்க இயலாது என்றும், மரண தண்டனையை விலக்கினால் மட்டுமே திரும்ப ஒப்படைக்க இயலும் என்றும் ஆஸ்திரேலியாவின் சட்டத்துறை தலைவரின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய காவல்துறையிடம் சைருலை கைது செய்யுமாறு மலேசியக் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், மரண தண்டனைக்கு எதிரானவர் என்பதால் தற்போது அந்நாட்டு அரசாங்கம் இந்த விவகாரத்தில் தர்ம சங்கடத்தை எதிர்நோக்கி வருகின்றது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அல்தான்துயாவின் மரணத்திற்கு, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளான பெக்டர் அஸிலா ஹட்ரி, கார்ப்பரல் சைருல் அஷார் உமார் ஆகிய இருவர் தான் காரணம் என்று கூறி நீதிபதி அரிபின் ஜகாரியா தலைமையிலான 5 உறுப்பினர்கள் குழு கடந்த ஜனவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.