Home நாடு சங்கப் பதிவிலாகா உத்தரவு எதிரொலி: குமார் அம்மான் உண்ணாவிரதம்

சங்கப் பதிவிலாகா உத்தரவு எதிரொலி: குமார் அம்மான் உண்ணாவிரதம்

578
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 22 – மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதை எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் (படம்) இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.

kuma amman

புத்ராஜெயாவில் உள்ள சங்கங்களின் பதிவிலாகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்னர், உள்துறை அமைச்சில் தாம் கடிதம் ஒன்றை ஒப்படைக்க இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மஇகா விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கும் பாங்கு தமக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் குமார் அம்மான் தெரிவித்தார்.

“தலைமைச் செயலாளராக நான் நியமிக்கப்பட்டது செல்லாது என்று குறிப்பிட்டு சங்கங்களின் பதிவிலாகா அனுப்பிய கடிதம் இரு தினங்களுக்கு முன் எனக்கு கிடைத்தது. ஆனால் இக்கடிதத்தில் உள்ள விவரங்கள் வாட்ஸ் அப் வழியாகவும் சில தமிழ் நாளேடுகள் மூலமாகவும் வெளியாகின,” என்றார் குமார் அம்மான்.

உண்ணைவிரதப் போராட்டம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கு, தாம் குறிப்பிட்ட சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் மாற்றப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்று அவர் கூறினார்.

“விசாரணைக் குழுவை, தலைமை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை நான் தனித்துப் போராடுவேன். சங்கப் பதிவிலாகாவின் நியாயமற்ற செயல்பாடு குறித்து மஇகா கிளைகள் மற்றும் தொகுதி தலைவர்கள் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் குமார் அம்மான்.

முன்னதாக சங்கங்களின் பதிவிலாகா நியாயமற்ற முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் தன்னைச் சந்திக்க மறுத்தால், சங்கப் பதிவிலாகா குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மஇகா விவகாரம் குறித்து விசாரித்து வரும் சங்கப் பதிவிலாகா அதிகாரி தம்மை சந்திக்க இரு முறை நேரம் ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ள குமார் அம்மான், கடைசி நேரத்தில் அச்சந்திப்பை அந்த அதிகாரி ரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார்.