நியூயார்க், ஜனவரி 28 – இந்தியாவில் இருந்த நாட்களின் போது, தாய்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன். இதில் ஆச்சரியப்பட வேண்டியதற்கு எதுவுமில்லை என ஜநா பொதுச்செயலாளர் பான் கி மூன் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.
ஐநா பொதுச்செயலாளராக உள்ள பான் கி மூன், தென் கொரியாவைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கான தென் கொரிய துணைத் தூதராக, தனது உயர் பொறுப்பினை கடந்த 1971-ல் தொடங்கினார்.
அந்த சமயத்தில், பலமுறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள பான் கி மூன், 2007-ல் ஐநா பொதுச்செயலாளர் ஆனார். அதன் பின்னர், இந்தியாவுக்கு மட்டும் 4 முறை வந்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில், இந்தியா வந்த அவர், புதுடெல்லி மற்றும் குஜராத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில், தனது இந்திய பயணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:
“குஜராத்தில், சபர்மதி ஆசிரமத்துக்கு நான் சென்றபோது, மிகச்சிறந்த மனிதர் மகாத்மா காந்தியுடைய கடிதங்களை பார்க்கும் சிறப்பு உரிமை எனக்கு கிடைத்தது. மகாத்மா காந்தி அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போரடியவர்”.
“ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட வழக்கறிஞர். அவருடைய உயர்பண்புகள்தான் ஐநாவுடைய பிரகடனத்திலும் உள்ளன. இந்தியாவில் இருக்கும் நாட்களின்போது, நான் என்னுடைய தாய் நாட்டில் இருப்பதை போன்றே உணர்கிறேன்”.
“இதில் ஆச்சரியப்பட வேண்டியதற்கு எதுவுமில்லை. நான் இந்தியாவில் இருந்த வீட்டின் தொலைப்பேசி எண் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இம்மாத தொடக்கத்தில், அனைத்துலக விவகாரங்களுக்கான இந்திய ஆணையக் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பான்கி மூன் பேசுகையில்,
“ நான் அரை மனதுடன் டெல்லியை விட்டு செல்கிறேன். டெல்லிக்கு மீண்டும் வரும்போதுதான் முழு மனிதன் ஆவேன்”. “இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்”.
“ஐநா பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பினைத் தாண்டி, இந்தியாவில் எனக்கு குடும்பங்கள் உள்ளன. இதனை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.“ என்றார்.