கோலாலம்பூர், ஜனவரி 29 – மஇகாவில் தற்போது நிலவி வரும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வர மறுதேர்தல் நடத்துவதே சிறந்த வழி என துணையமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசியத் தலைவர் முதல் கிளைத் தலைவர்கள் வரை அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான அவர் கூறினார்.
“முழு அளவிலான தேர்தலை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இன்று வரை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. சங்கப்பதிவிலாகா அளித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன,” என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார் கமலநாதன்.
புதன்கிழமையன்று மஇகா தலைமையகத்தில் நடந்த நிகழ்வுகள் ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட அவர், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளே தலைமையகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றார்.
“தேர்வு செய்யப்பட்ட உதவித் தலைவர் மற்றும் மகளிர் அணி தலைவர் ஆகிய இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு நடத்தப்படுவதை ஏற்க இயலாது” என்றார் கமலநாதன்.
இத்தகைய சூழ்நிலையில் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்துடன் அமர்ந்து பேசி தேசியத் தலைவர் பழனிவேல் பிரச்சினைக்குரிய தீர்வைக் காண வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சங்கப்பதிவிலாகாவின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்றார்.
கட்சியின் நலன் கருதி டத்தோஸ்ரீ பழனிவேல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கமலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
“கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அனைவரும் இணைந்து ஒருமித்த முடிவுகளை எடுத்தோம். ஆனால் அக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை,” என்று கமலநாதன் சுட்டிக்காட்டினார்.
பழனிவேலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், பழனிவேலும் டாக்டர் சுப்ரமணியனும் இணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இன்னும் இருப்பதாகத் தெரிவித்தார்.
“அடுத்த 24 மணி நேரத்திற்குள் மத்திய செயலவையைக் கூட்ட வேண்டும். இல்லையேல் மஇகா சட்டவிதிகளுக்குட்பட்டு அவசர பொதுக்குழுவைக் கூட்டி ஜனநாயக ரீதியில் முடிவுகளை எடுத்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும். கட்சியை தற்போது சூழ்ந்துள்ள கருமேகங்கள் கூடிய விரைவில் விலகும்,” என்றார் கமலநாதன்.