புத்ராஜெயா, பிப்ரவரி 5 – மஇகா மறுதேர்தல் தொடர்பில் அக்கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினையைத் தீர்க்கும் விதமாக மறுதேர்தல் நடத்துவது குறித்து ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
மஇகா உட்கட்சிப் பூசல் தொடர்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆகியோரை சந்தித்ததாக பிரதமர் நஜிப் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது, துணைப் பிரதமரும் தேசிய முன்னணி உதவித் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாகிட் ஹமிடி ஆகியோர் உடன் இருந்தனர்.
“மறுதேர்தல் குறித்து எடுக்கப்பட்ட முடிவை சங்கங்களின் பதிவிலாகாவுக்கு மஇகா தெரியப்படுத்தும். இந்நடவடிக்கை மறுதேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வசதியாக அமையும்,” என பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
சங்கப் பதிவிலாகாவில் இருந்து மஇகாவுக்கு உரிய கடிதம் கிடைக்கப் பெற்றதும் மறுதேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.