வாஷிங்டன், பிப்ரவரி 16 – இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்திருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வாகும். இதனை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.”
“தெற்கு ஆசியாவில் இரு நாடுகளும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம். அதனை உணர்ந்து விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் அமெரிக்கா வரவேற்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிரிக்கெட் போட்டியின் முக்கிய நிகழ்வான உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பேசிய மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேச்சுவார்தை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரை விரைவில் பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், பாகிஸ்தான் வர உள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளரை வரவேற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.