சிங்கப்பூர், பிப்ரவரி 16 – புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு இன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் தாக்கியிருந்த சுரப்பி அகற்றப்பட்டது.
“அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. விரைவில் அவர் பரிபூரண குணமடைவார்” என்று லீக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுநீரக சிகிச்சை நிபுணர் கிறிஸ்டோபர் செங் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, லீ சியானிற்கு வந்த நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்க்கும், தற்போது வந்திருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றும் கிறிஸ்டோபர் உறுதியாகக் கூறியுள்ளார்.
தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பிரதமர் லீ சியான் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சிங்கப்பூர் பிரதமர் துறை அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வ நட்பு ஊடகங்களின் வாயிலாகப் பகிர்ந்துள்ளது.