Home நாடு “2009 மத்திய செயலவையை ஏற்கிறோம் ஆனால்…” – சோதிநாதன் திட்டவட்டம்

“2009 மத்திய செயலவையை ஏற்கிறோம் ஆனால்…” – சோதிநாதன் திட்டவட்டம்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் மஇகா-வில், இரு தரப்பில் இருந்தும் தினமும் அனல் பறக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன் விடுத்த அறிக்கையின் தொடர்பில், இன்று டத்தோ எஸ்.சோதிநாதனும், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணனும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அதில், மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு சங்கங்களின் பதிவிலாகா விடுத்துள்ள உத்தரவுகளை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சோதிநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

IMAG1624

#TamilSchoolmychoice

இது குறித்து சோதிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மஇகா-வில் கடந்த காலங்களாக நிலவி வரும் பிரச்சனைகளை எண்ணி நாங்கள் வருந்துகின்றோம். மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரச்சனைகள் எல்லாம் நாங்கள் உருவாக்கியது அல்ல. 2013 -ம் ஆண்டு கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி பல பிரச்சனைகளை எழுப்பி இன்று கட்சி இந்த நிலைமைக்கு வந்துள்ளது.”

“ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) கூறும் எந்த ஒரு உத்தரவுகளுக்கும் நாங்கள் கட்டுப்படவில்லை. அதை ஏற்றுக் கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளோம். காரணம், ஆர்ஓஎஸ் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், முதலில் திருட்டுக் குற்றச்சாட்டு, பின்னர் கற்பழிப்பு, பின்னர் கொலை வழக்கு என்பது போல் நாளுக்கொன்றாக அவர்களின் பேச்சு இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு மாதிரி குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். தற்போது அவர்கள் கூறும் தீர்ப்பு தூக்கு தண்டனை போல் உள்ளது. அதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. நீதியும் இல்லை.”

“நமது தேசியத் தலைவர் பிரச்சனைகளைத் தீர்க்கவே முயன்று வந்தார். 2013-ம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்களோடு, குறைந்த பட்ச அதிகாரத்தை வைத்து கொண்டு மீண்டும் கிளைத்தேர்தல், தொகுதித்தேர்தல் ஆகியவற்றை நடத்தலாம் என்று தலைவர் சொன்னார். ஆனால் அவர்கள் (எதிர்தரப்பு) அது முடியாது என்று கூறிவிட்டார்கள்.”

“2009 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மஇகா-விற்கென்று சட்டவிதிகள் உள்ளன. நாட்டிற்கென்று சட்டவிதிகள் உள்ளன. இதற்கெல்லாம் கட்டுப்பட்டு தான் நாம் செயல்பட வேண்டும். அந்த சட்டவிதிகளின் படி, தலைவருக்கு கட்சியில் முழு அதிகாரம் உள்ளது. துணைத்தலைவருக்கும் உள்ளது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அந்த சட்டவிதிகளின் படி செயல்பட நாங்கள் சம்மதிக்கின்றோம்.”

IMAG1593

“ஆனால், அந்த தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், 2009-ம் ஆண்டு மத்திய செயலவையை கொண்டு தேர்தல் நடத்துவோம். ஆனால் தலைவர் அங்கு ஒரு பொம்மையாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் ஒரு இயக்கம் இருப்பது சரியா? அங்கே மானம் இருக்கின்றதா? நாங்கள் மஇகா கிளைத்தலைவர்கள் மானத்தை அடகுவைத்தா அரசியல் நடத்துகின்றோம்?”

“தலைவருக்கான அதிகாரத்தை கட்டுப்படுத்தி தேர்தல் நடத்த வேண்டுமென்றாலும், கட்சியின் மூன்றாம் தரப்பு தலையிட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். 2013 தேர்தலை நடத்தியது யார்? 2009-ம் ஆண்டு உறுப்பினர்கள் தானே? அப்படி என்றால் இந்த தேர்தல் மோசடிக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் அவர்கள் தானே? அவர்களே மோசடியும் செய்து விட்டு அவர்களையே மறுதேர்தல் நடத்தவும் கூறினால் என்ன ஒரு அநீதி” இவ்வாறு சோதிநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்பது எங்களின் கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இங்கு இருக்கக்கூடிய அனைத்து மஇகா உறுப்பினர்களின் கருத்து, இந்திய சமுதாயத்தின் கருத்து என்றும் சோதிநாதன் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் சங்கங்களின் பதிவிலாகா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக செவ்வாய்கிழமை வரை பழனிவேல் கெடு விதித்தார் தற்போது அதை நீடிப்பு செய்வதற்கான அவசியம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த சோதி, பிரதமர் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிடுவதால் அவருக்கு மரியாதை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சோதிநாதன் தெரிவித்தார்.

“3700 கிளைத்தலைவர்கள் ஒருமனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுத்த தலைவர் பழனிவேலை, மீண்டும் இடைக்காலத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் சொன்னால் அது எந்த வகையில் நியாயம்?” என்றும் சோதிநாதன் கேள்வி எழுப்பினார்.

நேற்று, டத்தோ சரவணன் வெளியிட்ட அறிக்கையில், 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை தான் மறுதேர்தலை நடத்தும் என்றும், தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லையென்றும் சங்கங்களின் பதிவிலாகா அறிவித்திருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.