Home உலகம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் கைது – பயங்கரவாதி என குற்றச்சாட்டு!

மாலத்தீவின் முன்னாள் அதிபர் கைது – பயங்கரவாதி என குற்றச்சாட்டு!

605
0
SHARE
Ad

nasheed-600மாலே, பிப்ரவரி 23 – மாலத் தீவின் முன்னாள் அதிபரும் தற்போதய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத்(47),  தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபராக பதவியில் இருந்த போது, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் தலைதூக்கின. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2013–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

#TamilSchoolmychoice

மாலத் தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நீதிபதி கைது தொடர்பான வழக்கில், முகமது நஷீத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், முகமது நஷீத் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “23-02-2015-ல் நடைபெறும் விசாரணையில் பங்கேற்காமல், நஷீத் தலைமறைவாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

நஷீத் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது.

மாலத் தீவில், முதல் முறையாக ஜனநாயக அடிப்படையில் தேர்வான அதிபர் என்ற சிறப்பு பெற்ற நஷீத், உள்நாட்டு புரட்சி காரணமாக பதவி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஷீத் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்களும் உள்ளது என பொது விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

“மாலத்தீவு வலிமையான அதிகாரத்தின் பிடியில் சிக்கி மிக மோசமான நிலைமையில் உள்ளது. உலக சமுதாயம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவிற்கு வருவதற்கு முன்னர் ஒருமுறை யோசித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுபோன்று ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை அவர் கூறி வருவதால், கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.