Home நாடு நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அன்வாரின் விண்ணப்பம்: சிறைத்துறை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அன்வாரின் விண்ணப்பம்: சிறைத்துறை நிராகரிப்பு

565
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 10 – நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரிய அன்வார் இப்ராகிமின் விண்ணப்பத்தை சிறைத்துறை நிராகரித்துள்ளது.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிக்கி, 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார் அன்வார். 13ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரில் பங்கேற்க அன்வாருக்கு அனுமதி வழங்கக் கோரி சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

Anwar ibrahimஇந்நிலையில் இந்த விண்ணப்பத்தை நிராகரித்து இருப்பதாக சிறைத்துறை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்ளி ஓமார் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சிறைச்சாலை சட்டத்தின் 31(1)(a) என்கிற பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்று கடந்த 4ஆம் தேதி அன்று அன்வாருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அன்வாரை அனுமதிக்கக் கோரி அவரது மகள் நூருல் இசாவும், சட்ட நிறுவனம் ஒன்றும் விண்ணப்பங்களை அளித்திருந்ததாகவும் சுல்கிஃப்ளி ஓமார் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதியாக இருக்கும் ஒருவர், மலேசியாவின் ஏதேனும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருந்தாக வேண்டும் என்பதற்கு தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே அவர் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட முடியும் என சிறைச்சாலை சட்டத்தின் 31(1)(a)ஆவது பிரிவு குறிப்பிடுவதாகவும் சுல்கிஃப்ளி ஓமார் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.