கோலாலம்பூர், மார்ச் 13 – மஇகா தேர்தல் குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை மஇகா மத்திய செயலவை நியமித்திருப்பதை பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ முருகையா வரவேற்றுள்ளார். டி.பி.விஜேந்திரனின் அனுபவம் கட்சித் தேர்தலை வழிநடத்த நிச்சயமாகக் கைகொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
“டி.பி.விஜேந்திரனை தேர்தல் குழுத் தலைவராக நியமிக்க இருப்பதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார். தற்போது மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளைத் தீர்க்க மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மறுதேர்தலிலும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கட்சிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.”
“எனவே தேர்தலை நடத்த ஒரு மூத்த தலைவரும், கட்சி சட்டங்களை நன்கு அறிந்த ஒருவரும் தேவை. டி.பி.விஜேந்திரனைப் பொறுத்தவரை சட்டத் துறையிலும் மஇகா விவகாரங்களிலும் நீண்ட முன் அனுபவம் உள்ளவர். எனவே அவரை தேர்தல் குழுத் தலைவராக நியமிப்பது என்பது மிகச் சரியான நடவடிக்கையாகவே அமையும்,” என்று முருகையா கூறியுள்ளார்.
“கடந்த 1989ஆம் ஆண்டு மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவியபோது கட்சியின் தலைமைச் செயலராக டி.பி.விஜேந்திரன் பதவி வகித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மஇகாவில் பல்வேறு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்ததும் விஜேந்திரன் தான்” என்றும் முருகையா சுட்டிக்காட்டி உள்ளார்.
“கடந்த 1990களில் மஇகா சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது அக்குழுவிற்கு தலைமை ஏற்றிருந்தார் விஜேந்திரன். இந்நிலையில் சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மஇகாவில் தேசியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் நல்ல சட்ட அறிவும், கட்சி நலனில் அக்கறை கொண்டவருமான விஜேந்திரன், தேர்தல் குழுத் தலைவராக இருந்து தேசியத் தலைவர் பதவி மற்றும் இதர பொறுப்புகளுக்குமான தேர்தலை நடத்துவது அனைத்து தரப்புக்கும் ஏற்புடையதாகவே இருக்கும்,” என முருகையா மேலும் கூறியுள்ளார்.