கோலாலம்பூர், மார்ச் 16 – மலேசியாவில் ‘மைலோ’ பயன்படுத்தாத வீடுகள் குறைவு என்றே கூறலாம். அந்த அளவிற்கு மலேசியர்கள் ‘மைலோ’ என்ற ஊட்டச்சத்து பானத்தை விரும்பி அருந்தி வருகின்றார்கள்.
இதன் காரணமாக, எல்லா உணவுக் கடைகளிலும் எந்த நேரத்திலும் ‘மைலோ’ கிடைக்கும். அவ்வளவு பிரபலமான பானமாக ‘மைலோ’ விளங்குகின்றது.
(தரமான ‘மைலோ’ பாக்கெட்டுகளைக் கண்டறிய நெஸ்ட்லி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டுள்ள விழிப்புணர்வு படம்)
நெஸ்ட்லி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பானத்தின் போலி தயாரிப்பு பாக்கெட்டுகள், நெகிரி செம்பிலானில் விற்பனை செய்யப்படுவதை, அண்மையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அதிரடி சோதனை நடத்திய போது கண்டறிந்தது.
1000 காலி மைலோ பெட்டிகள், 50,000 காலி மைலோ பாக்கெட்டுகள், ஒரு அச்சு இயந்திரம், எடை போடும் இயந்திரம் என போலி மைலோ தயாரித்து விற்பனை செய்யத் தேவையான சுமார் 250,000 மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டு மியாந்மர் நாட்டவர் மற்றும் இந்தோனேசியர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனால், உடனடியாக விழித்துக் கொண்ட நெஸ்ட்லி நிறுவனம் எது தரமான தயாரிப்பு? எது போலி தயாரிப்பு? என்பதை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள தங்கள் பேஸ்புக், இணையதளம் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.