Home உலகம் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்க இலங்கை அரசு திடீர் முடிவு!

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்க இலங்கை அரசு திடீர் முடிவு!

652
0
SHARE
Ad

SriLankaFlagPicture5கொழும்பு, மார்ச் 20 – விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ராஜபக்சே ஆட்சியின் போது குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் மீதான தடையை விலக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தி விட்டு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது அமைந்துள்ள மைத்ரிபால அரசு தமிழர்களின் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவின் உதவியையும் நாடியது.

#TamilSchoolmychoice

இந்த சூழலில் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் உடனான ஆலோசனையின் பேரில் அங்கு தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும 13-வது சட்ட திருத்தம், மீள் குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது இந்திய உதவியுடன் கட்டப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ராஜபக்சே ஆட்சியின் போது விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஏராளமான தமிழ் அமைப்புகள் தடை செய்யப்பட்டன.

மேலும் இது தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் கடந்த ராஜபக்சே ஆட்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று பேசுகையில்,

“தமிழ் அமைப்புகள் மீதான தடையை விலக்க அதிபர் மைத்ரிபால அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக கடந்த ராஜபக்சே ஆட்சியின் போது புலிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் மீதான தடையை விலக்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்”.

“மேலும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தேசிய மறுகட்டமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”.

“இதன் தொடர்ச்சியாக இலங்கை தேசிய கட்டமைப்பில் தமிழ், முஸ்லிம், சிங்கள அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது என்றார். இதுகுறித்து மைத்ரிபால கூறுகையில், 13வது  சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்”.

“அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து உறுதியான நடவடிக்கைகளை இந்த அவை மேற்கொள்ளும்” என்றும் தெரிவித்தார்.