பெய்ஜிங், மார்ச் 21 – இலங்கை பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டதற்கு ஒப்பானதாக இருந்தது என சீனா விமர்சனம் செய்துள்ளது.
இலங்கைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற மோடி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். இந்த பயணத்தை கண்டித்துள்ள சீனா, மோடியின் போக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஷங்காய் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான லியு ஸாங்கி எழுதியுள்ள ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் மோடியின் இலங்கை பயணம் தொடர்பாக கூறியிருப்பதாவது:-
“மோடியின் இலங்கை பயணம் சீனா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை சேர்ந்த ஊடகங்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. கொழும்புவில் சீனாவின் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை மோடியின் பயணத்தோடு இணைத்து, இதன்மூலம் இலங்கையுடனான உறவுகளில் டெல்லியின் கை ஓங்கிவிட்டதாக பல ஊடகங்கள் நம்பின.”
“தனது இலங்கை பயணத்தின்போது தமிழர்கள் நிறைந்த யாழ்ப்பாணம் பகுதியையும் மோடி இணைத்து கொண்டது, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா செய்யும் தலையீடாகவே கருதப்படுகிறது”.
“இங்குள்ள தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்றவை தீராத வரையில் இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை குறுகிய காலத்தில் சரிபடுத்திவிட முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்தியா போன்ற சக்திகளுக்கு உடன்பாடான வகையில் இலங்கை அரசு நடந்து கொள்வதும், அதன் காரணமாக சீனாவின் நல்லெண்ணத்தை இலங்கை அரசு நிராகரிப்பதும் சீனாவிற்கு துளி அளவிலும் பாதிப்பில்லை. ஆனால் அனைத்துலக சமுதாயத்தில் இலங்கை தனது நன்மதிப்பை இழந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.