Home நாடு மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) – தமிழ்மணி கண்ணோட்டம்

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) – தமிழ்மணி கண்ணோட்டம்

563
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 23 – ம இ கா சொத்து குறித்து படு பயங்கரமான அறிவாளிகள் சிலர்,  நாள்தோறும் அறிக்கைகள் விடுவதும், அந்த அறிக்கைகளே முன்னுக்குப் பின் முரணாகவும் மிகவும் சாமானியனைக்கூட, குழப்புவதாகவும் வெளியிடப்படுகின்றன.

அந்த அறிக்கைகளில் உண்மையிலேயே அறிவு சார்ந்த விவாதம் ஏதும் முன் வைக்கப்பட்டிருக்கின்றதா? என்பதுதான் நமது கேள்வி!Tamil Mani

கணக்கு விவரங்கள் உண்மையா?

#TamilSchoolmychoice

முதலில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவருகின்ற கணக்கு விபரத்தை, ஓர் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. அறிக்கை விடும் அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் விபரம் தெரிந்து பேசுவதோ! அறிக்கை விடுவதோ இல்லை!

யாரோவொரு அரசியல்வாதி, தனக்கு கிடைத்த தவறான புள்ளி விபரத்தையோ ஏதோவொரு சம்பவத்தையோ வெளிப்படுத்தும் போது, அதில் தர்க்க ரீதியிலான அடிப்படை உண்மைகள் இருக்கிறதா? என்பதை ஆராய்வதற்குப் பதில், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு, பிறரைப் பதம் பார்ப்பதில், தங்களின் தவற்றை வெளிப்படுத்தி விடுகிறார்கள். பத்திரிகைகளும் அவற்றை அபடியே வெளிப்படுத்துகிற பாணியை, அல்லது அந்த அரசியல்வாதிகளின் பெயரில் அந்த அறிக்கையை. அப்படியே காப்பியடித்து வெளிப்படுத்துவதில்.அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருப்பதை பார்கக.முடிகிறது.

அந்த வகையில்தான் ம இ கா வின் அந்த 300.கோடி வெள்ளி சொத்து விவகாரமும் அடங்குகிறது.

தேவையற்ற வேட்டுச் சத்தம்!

நாம் இந்த வாதத்திற்குள் நுழைவதற்கு முன்னால் உண்மையிலேயே மஇகாவுக்கு 300 கோடி சொத்து இருக்கிறதா? அல்லது மேற்போக்கான ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில பிரச்சனை எழுப்பப்படுகிறதா அல்லது ஒரு யூகத்தின் அடிப்படையில், இப்படி ஒரு வாதம் சொல்லப்படுகிறதா? என்பதை அறிவதில் ஆர்வம் எழுந்தது.

அதனுடைய விளைவுதான் எனது இந்த வாதங்கள்!

சில வழக்கறிஞர்களே தப்பும் தவறுமாக இதில் தலையிட்டு, தங்கள் வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் என்னை பெருமளவு வியக்க வைத்தது.

சரி விசயத்திற்கு வருவோம்! ம இ கா பெயரில் நேரடியாக எந்தச் சொத்தும் வைத்துக்கொள்ள முடியுமா? அல்லது ம இ காவின் மத்திய செயலவையின் அனுமதி பெற்று நியமிக்கப்படும் அறங்காவலர்கள் (டிரஸ்டி) பெயரில் சொத்துக் காப்பாளர்கள் என்றளவில் சொத்து வைத்திருக்க முடியுமா? என்பதுதான் நமது கேள்வி!

அப்படி அறங்காவலர்களாக இருக்கும் நபர்கள், எந்த வகையிலும் அந்தச் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. காரணம் கட்சியின் சொத்தை பராமரிக்கின்ற உரிமை மட்டுமே அவர்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதைத்தவிர அச்சொத்துகளை தன்னிச்சையாக தங்களுடையதாக மாற்றிக்கொள்ள எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. அப்படியே சொத்து விற்பனை என்றளவில் ஒரு காரியம் நடந்தால் கூட, கட்சியின் மத்திய செயலவை அனுமதியோடுதான் மேற்கொள்ளப்படவேண்டும்!

அச்சொத்து கட்சியின் இன்ன பிற நடவடிக்கைகளுக்கு, கட்சியின் அனுமதியோடுதான் பயன்பாடு பெற முடியும் என்பதுதானே விதி? எனவே இத்தகைய கட்டமைப்புகளோடு அமைக்கப்பட்டுள்ளது ம இ காவின்.சொத்து பராமரிப்பு முறை!

நிலைமை இப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் அச்சொத்துகள் தனிநபர்களிடம மாட்டியிருப்பதாகவும் அதை உடனடியாக மீட்டு அல்லது மாற்றி ஆறு லட்சம் உறுப்பினர்களின் பெயரில் எழுதப்படவேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்படுகின்றது?

அத்தகைய கூக்குரல் வெறும் வெற்று வேட்டுச் சத்தந்தானே?

இந்த வெற்றுக் கூச்சல்படி, ஆறு லட்சம் உறுப்பினர்களின் பெயரிலோ அல்லது ஆறு லட்சம் பேரை அறங்காவலர்களாகவோ நியமிக்கத்தான் முடியுமா?

எனவே, முதலில் ம இ காவின் சொத்துகள் அனைத்தும் கட்சியின் சட்டப்படியும் கட்சிக்குரியதாகவே இருக்கிறது. தற்போதைய அறங்காவலர்களில் ஏதும் மாற்றம் செய்ய கட்சி விரும்பினால் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற முடிவுப்படி செய்து கொள்வதில் தடையேதும் கிடையாது. இந்த நிலைப் பாட்டிலிருந்து, சட்டம் மறு திருத்தத்திற்கு வரும் வரை ம இ கா இந்த அடிப்படையில்தான் அதாவது,  கடந்த 69 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இந்த நிலைப்பாடு ம இ காவுக்கு மட்டுமல்ல! பெரும்பான்மையாக சொத்துக்கள் உள்ள எல்லா பொது அமைப்புகளிலும், அரசியல் கட்சிகளிலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடை முறையைத்தான் சட்ட அமலாக்கமும் உறுதிப்படுத்துகிறது.

நிலைமை இப்படியிருக்க, “ம இ கா சொத்தை ஆறு லட்ச உறுப்பினர்களுக்கு சொந்தமாக்குவேன்” என்று பழனி வழங்கியிருக்கும் வாக்குறுதியை எந்த கோணத்தில் எடுத்துக்கொள்வது?

இப்படியொரு அறிவிப்பைச் செய்கிற அவர்தான் இப்போதைய ம இ கா தலைவருமாவார். கட்சியின் அதிகார வரம்புக்குரியவரே அவர்தான்! அவரே முரண்பாட்டின் மொத்தவுருவமாக மாறியிருக்கிறார் என்றால், அவருக்கு என்ன கோளாறு? அதை எப்படிச் சரி செய்வது என்ற அச்சம் கட்சியின் ஆறு லட்ச உறுப்பினர்களையும் குழப்பித்தானே இருக்கிறது?

எது ம இ கா சொத்து?

ம இ காவின் சொத்து குறித்தான ஞானோதயம் இப்போதாவது சிலருக்கு வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விசயமே!

ஆனால் அந்த ஞானோதயம் அடாவடித்தனமாகவும சட்ட மீறலாகவும் இருந்துவிடகூடாது அல்லவா?

எனவே நேரடியாக ம இ கா வின் சொத்து என்பதற்கும் ம இ கா வால் துவக்கப்பட்ட. நிறுவனங்களின்.சொத்து என்பதற்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாக ம இ கா பெயரில் தலைமையக் கட்டிடம், பல மாநிலங்களில் மாநில ம இ கா கட்டிடங்கள்,  பல தொகுதிகளில், தொகுதி ம இ கா கட்டிடங்கள், சில ம இ கா கிளைகளின் கட்டிடங்கள், அதையொட்டிய நிலப்பகுதிகள், தனியாகப் பெறப்பட்ட நிலங்கள் எல்லாமே ம இ கா என்கிற அரசியல் கட்சியின் சொத்துகள்தான்.

Headquarters_of_MIC

அவற்றை பராமரிக்கிற பொறுப்பின் அடிப்படையில்தான் (டிரஸ்ட்டிகள்) அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அச்சொத்துகளை விற்கவோ மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளவோ, ம இ கா மத்திய செயலவையின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறப்படும் அனுமதியால்தான் அது ம இ காவின் சொத்து என்று கருதப்பட .இடமளிக்கிறது!

இது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அதனாலதான் ம இ கா என்ற அரசியல் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு?  அது எத்தனை கோடி பெறும்? என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது.

ஒரு சில பத்திரிகைகளில் யூகத்திற்கு ஒரு எண்ணிக்கையை வெளியிடுகிறார்கள். ம இ காவுக்கு 300 கோடி சொத்து மதிப்பீடு என்றால் அச்சொத்துக்குரிய மதிப்பீட்டை யார் செய்தது? இதை நிச்சயமாக ஒரு தனிப்பட்ட. மனிதன் செய்திட முடியாது. சொத்து மதிப்பீட்டை செய்து தருவதற்கு தனியார் நிறுவனங்கள் உண்டு. அதனால்தான் எந்த நிறுவனம் மஇகாவுக்கு 300 கோடி சொத்து என மதிப்பீடு செய்தது?

இச்சொத்து மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொண்ட சொத்துகளின் பட்டியல் எங்கே? அச்சொத்துக்கள் எந்தெந்த உருவமைப்புகளில் இருக்கின்றன? அவை எந்தெந்த மாநிலங்களில் இருக்கின்றன? அப்படிப் பட்டியல் இடப்பட்ட ஒவ்வொரு சொத்தின் தனித் தனி மதிப்பீடுகள் என்ன? அதோடு நடப்பு மதிப்பீடு என்ன? நீண்டகால மதிப்பீடு என்ன? அதற்குரிய விபரத்திரட்டு என்ன?

இந்த அடிப்படையில்தான் ம இ கா என்கிற அரசியல் கட்சியின் சொத்து மதிப்பீட்டை 300 கோடி என்று முன் நிறுத்த முடியுமே ஒழிய, பைத்தியக்காரன் ஏதோ வைத்தியம் பார்த்தது மாதிரி எதையும் உளறி வைக்கக்கூடாது.

ம இ காவின் துணை நிறுவனங்கள்

அடுத்து ம இ கா ஓர் அரசியல் கட்சி என்ற அடிப்பபடையிலும், அதனுடைய சேவைத் திட்டத்தின் அடிப்படையிலும் சமுதாய மேம்பாட்டு என்ற வகையிலும் துவக்கப்பட்ட அத்தனை நிறுவனங்களும் ம இ கா வின் சொத்துகள்தான் என்பதில் புது குழப்பம் ஏதும் அடைய வேண்டிய அவசியமே கிடையாது.

DSC_0043_1759

குறிப்பாக சிரம்பான் டேப் கல்லூரி, கெடா ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இவை இரண்டும் ம இ காவின் தலையாயத் திட்டங்கள்! கட்சியின் சேவைத் திட்டங்களில் அதிமுக்கியத்துவம் பெற்றதாகும். இருப்பினும் இவற்றை ஓர் அரசியல் கட்சி தனது நேரடிப் பார்வையில் நடத்த முடியாது. அதற்கு. சட்டமும் அனுமதிப்பதில்லை. அதனால் அவைகளுக்கு நேரடி அரசு மானியம் பெறவும் முடியாது.

எனவேதான் எம் ஐ இ டி என்று தனி கல்வி அறவாரியம் துவக்கப்பட்டது.

-பெரு.அ.தமிழ்மணி

நாளை இரண்டாம் பாகம்:

1.  எம்.ஐ.இ.டி வாரிய உறுப்பினர்கள் யார்? யார்?

2.  எம்.ஐ.இ.டி. மஇகா சொத்தாகத்தான் இருக்க வேண்டும்!

3.  மஇகா சொத்துகளுக்கு ஆபத்தா?

4.  எங்கே இருக்கிறது 300 கோடி ரிங்கிட் சொத்துகள்?

(பின்குறிப்பு:  மஇகா  சொத்துகள் குறித்து எழுந்திருக்கும் சர்ச்சையைத் தொடர்ந்து,  மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம் இது. இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com

 

Comments