கோலாலம்பூர், மார்ச் 23 – ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்படுவதை ஏற்க இயலாது என மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
அச்சட்டம் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது முக்கியமான விவகாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஹூடுட் சட்டத்தை எப்படியாவது அமல்படுத்த வேண்டும் என பாஸ் கட்சி முயற்சிக்கிறது. இதன் மூலம் சட்டத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால் ஹூடுட் கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு எதிரானது,” என்று செய்தியாளர்களிடம் பேசிய லியோவ் தெரிவித்தார்.
இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் மசீச மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக குடிமைச் சட்டங்களை மட்டுமே பயன்படுத்த கூட்டரசு அரசியல் சாசனம் அனுமதிப்பதாக தெரிவித்தார்.
“ஒரே குற்றத்திற்கு எதிராக இரு வேறு சட்டங்களைப் பயன்படுத்தினால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும்,” என்றார் லியோவ்.
இதற்கிடையே ஹூடுட் சட்டத்தை ஆதரிக்க இயலாது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஹூடுட் சட்ட அமலாக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். அதை ஆதரிக்க இயலாது. அது கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு எதிரானது,” என்று பழனிவேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹூடுட் சட்டம் தொடர்பான தேசிய முன்னணி நிலைப்பாடு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஹூடுட் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்று கூறவில்லை. எந்தவொரு சட்டமும் சட்டம் தான். இஸ்லாமியர்களுக்கு கடவுளின் சட்டமே சட்டமாகும். ஆனால் ஐசெகவும் பிகேஆரும் தான் இதை வைத்து விளையாடுகிறார்கள். நாம் கூட்டரசு அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டியது அவசியம். பாஸ் கட்சியின் ஹூடுட், அரசியல் ரீதியான ஹூடுட்,” என்று துங்கு அட்னான் மேலும் கூறியுள்ளார்.