பாரீஸ், மார்ச் 24 – இன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என பிரான்ஸ் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அலைன் விடலைஸ் நேற்று மாலை அறிவித்தார்.
லுப்தான்ஸா நிறுவனத்தின் மலிவு கட்டண விமானச் சேவை நிறுவனமாக செயல்பட்ட ஜெர்மன் விங்ஸின் ஏர்பஸ் 320 ரக விமானம் பிரான்சின் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்திலிருந்து ஜெர்மனியின் டஸ்செல்டார்ப் நோக்கிச் சென்றபோது விபத்துக்குள்ளானது.
“காலை 10.30 மணி அளவில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அச்சமயம் விமானத்தில் இருந்து அபாய சமிக்ஞைகள் கிடைத்தன. மேலும் சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திலேயே அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. இது ஓர் அசாதாரணமான நிலை,” என்று அலைன் விடலைஸ் தெரிவித்தார்.
ஸ்பெயின் மன்னர் பயணம் ரத்து
இன்று அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு பிரான்ஸ் வந்த ஸ்பெயின் மன்னர் பிலிப் (நடுவில்) அவரது துணைவியார் ராணி லெட்டிசா (வலது) ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோல்லாண்ட் (இடது). இன்று நிகழ்ந்த ஜெர்மன் விங்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து ஸ்பெயின் மன்னரின் பிரான்ஸ் வருகை ரத்து செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தில் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்களே அதிகம் இருந்ததாக தெரிகிறது. விபத்தை அடுத்து பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் VI தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
“விமானம் ஆல்ப்ஸ் மலையின் ஓர் ஓரப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த இடத்தை சென்றடைவது சுலபமல்ல. குறைந்த பட்சம் பல மணி நேரங்களுக்கு மீட்புக் குழுவினரால் அந்த இடத்தைச் சென்றடைய முடியாது. இச்சமயத்தில் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு பக்கபலமாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் விங்ஸ் விமான விபத்து குறித்த அறிக்கையை இன்று பெர்லினில் அறிவிக்கும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்
ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ‘லெஸ் ட்ராய்ஸ் எவச்ஸ்’ என்ற மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் அங்கு இருப்பதை உறுதி செய்துள்ளது.
விபத்து பகுதியில் பனி படர்ந்திருப்பதால் அங்கு வாகனங்களைப் பயன்படுத்த முடியாது என்றும் மீட்புப் பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என 150 பேர் பலியாகி இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இது ஓர் இருண்ட நாள்: லுப்தான்சா
இந்த விபத்து லுப்தான்சா நிறுவனத்தார் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கார்ஸ்டன் ஸ்போர், “இது ஓர் இருண்ட நாள்,” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“விபத்துக்குள்ளான 4U 9525 விமானத்தின் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது அச்சம் உறுதி செய்யப்படுமானால் லுப்தான்சா நிறுவனத்துக்கு இது ஓர் இருண்ட நாள் ஆகும். விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்கள் எனில் அவர்களை கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறோம்,” என்றும் கார்ஸ்டன் ஸ்போர் மேலும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தில் பயணம் செய்தி பயணிகளின் உறவினர்கள் சிலரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் ஜெர்மன் காவல் துறையினர்…
படங்கள்: EPA