சென்னை, ஏப்ரல் 6 – வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். நேற்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை, அம்பத்தூரில் நடந்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– “தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு’ என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன்”.
“பெற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் பதவி கொடுத்து, கடைசி வரை பதவியைத் தேடிய தலைவர்களுக்கு மத்தியில், தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான் பிரபாகரன்”.
“50 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது? தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் பசி, பஞ்சம், பட்டினி,வறுமை, ஏழ்மை தான் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு நாமே மாற்று நாம் தமிழரே மாற்று”.
“வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவது என்று முடிவெடுத்து நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. இந்த போட்டி என்பது தோற்பதற்கல்ல, தொடங்குவதற்கு. மே 24-ஆம் தேதி திருச்சியில் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்துகிறது. ஒவ்வொரு தமிழரும் பங்கேற்க வேண்டும்” என சீமான் பேசியுள்ளார்.