ஜாகர்த்தா, ஏப்ரல் 6 – இந்தோனிசிய அரசாங்கத்தால் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அண்ட்ரு சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு ஆஸ்திரேலியர்கள் செய்திருந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை இந்தோனிசிய நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் இருவரும் தங்களின் வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கும் 8 அக்டோபர் 2010 தேதியிட்ட பழைய கோப்புப் படம்
துப்பாக்கி முனையில் சுட்டுக் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும் தற்போது பாலியில் உள்ள நுசாகம்பாங்கான் தீவுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் இறுதி மன்னிப்பு கோரிக்கையை இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நிராகரித்ததைத் தொடர்ந்து அந்த முடிவை எதிர்த்து இவர்கள் இந்தோனிசிய உச்ச நீதிமன்றத்தில் தங்களின் மேல் முறையீட்டை சமர்ப்பித்திருந்தனர்.
அண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் இருவரையும் பிரதிநிதித்த வழக்கறிஞர் லியோனர்ட் அர்பான் (நடுவில் நீல நிற கழுத்துப் பட்டையுடன்) இன்றைய தீர்ப்புக்குப் பின்னர் ஜாகர்த்தாவின் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் காட்சி
இன்று திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரித்த இந்தோனிசிய மாநில நிர்வாக நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், இந்தோனிசிய அதிபரின் மன்னிப்பு விவகாரம் தங்களின் அதிகாரத்தின் கீழ் வரவில்லை என்றும், நீதிமன்றத்தின் நாடாளுமன்ற சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மீதுதான் விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு எனவும் அதனால் இந்த மேல் முறையீட்டை தாங்கள் நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தோனிசியாவிற்குள் ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக 2005ஆம் ஆண்டில் அண்ட்ரு சான், மயூரன் இருவரும் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து அந்த ஆஸ்திரேலியர்கள் இருவரையும் தொடர்ந்து காப்பாற்ற முயன்று வருவோம் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
படங்கள்: EPA